ஆன்மிகம்
இயேசு

இயற்கை மீது அதிகாரம் கொண்ட கடவுள்

Published On 2021-07-08 03:48 GMT   |   Update On 2021-07-08 03:48 GMT
இயேசு கிறிஸ்து தாம் இயற்கை மீது அதிகாரம் கொண்ட கடவுள் என்பதை தமது அற்புதங்கள் மூலம் எண்பித்தார். கலிலேய ஏரியில் ஏற்பட்ட புயலை இயேசு அடக்கியதையும், அவர் சபித்த அத்தி மரம் பட்டுப்போன நிகழ்வையும் இங்கு காண்போம்.
ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், “ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்” என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள். படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று. அவர் அவர்களிடம், “உங்கள் நம்பிக்கை எங்கே?” என்றார். அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், “இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். (லூக்கா 8:22-25)

பெத்தானியாவை விட்டு அவர்கள் எருசலேமுக்கு திரும்பிய பொழுது
இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது, அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். (மாற்கு 11:12-14,20)
Tags:    

Similar News