ஆன்மிகம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்ததை படத்தில் காணலாம்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபாடு

Published On 2021-07-06 04:05 GMT   |   Update On 2021-07-06 04:13 GMT
நேற்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நேற்று பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டன. கோவில்களுக்குள் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதி இல்லாத காரணத்தால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். எப்போது வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பிலேயே மக்கள் இருந்து வந்தனர்.

தற்போது கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை நேற்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தி உள்ளது.

அதன்படி வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன.

நாகை மாவட்டத்தில் உலக பிரசித்திப்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் உள்பட பெரும்பாலான வழிபாட்டு தலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும் இரும்பிலான தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நேற்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் அதிகளவு பக்தர்கள் திரண்டனர்.

பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் பிரார்த்தனை செய்தனர்.

Tags:    

Similar News