ஆன்மிகம்
இயேசு

கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்

Published On 2021-07-05 04:42 GMT   |   Update On 2021-07-05 04:42 GMT
இயேசு கிறிஸ்து தம் பணி வாழ்வில், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” (மாற்கு 4:9) என்று அழைப்பு விடுத்தார். காது கேளாமலும் பேச முடியாமலும் இருந்த சிலருக்கு இயேசு நலம் அளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.
இயேசு கிறிஸ்து தம் பணி வாழ்வில், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” (மாற்கு 4:9) என்று அழைப்பு விடுத்தார். காது கேளாமலும் பேச முடியாமலும் இருந்த சிலருக்கு இயேசு நலம் அளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.

பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். (மத்தேயு 9:32-33)

பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பார்வையற்றவரும் பேச்சற்றவருமாக இருந்தார். இயேசு அவரைக் குணமாக்கினார். பேச்சற்ற அவர் பேசவும் பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது. திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், “தாவீதின் மகன் இவரோ?” என்று பேசிக்கொண்டனர். (மத்தேயு 12:22-23)

இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்தில் இருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.

பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.

அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள். (மாற்கு 7:31-37)
Tags:    

Similar News