ஆன்மிகம்
இயேசு

முடக்குவாதத்தை குணப்படுத்திய இயேசு கிறிஸ்து

Published On 2021-06-28 03:49 GMT   |   Update On 2021-06-28 03:49 GMT
இயேசு கிறிஸ்து தம் பணி வாழ்வில் பற்பல அற்புதங்கள் செய்ததாக நற்செய்திகளில் காண்கிறோம். முடக்குவாதம் பாதித்த மூவருக்கு அவர் நலமளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். (மத்தேயு 8:5-13)

இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். (மாற்கு 2:1-12)

எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப் படுத்துக்கிடப்பர். [இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள். ஏனெனில் ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்று இருந்தாலும் நலமடைவார்.] முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.

இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கி விட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார். (யோவான் 5:2-9)
Tags:    

Similar News