ஆன்மிகம்
இயேசு

மனநலம் பாதித்தோரை இயேசு குணமாக்குகிறார்

Published On 2021-06-25 05:20 GMT   |   Update On 2021-06-25 09:02 GMT
இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளில் இருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர்.
கப்பர்நாகும் தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணம் ஆனவர்” என்று உரத்த குரலில் கத்தியது. “வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார்.

அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று. எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது. (லூக்கா 4:33-37)

கதரேனர் பகுதி

இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளில் இருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள். அவர்கள், “இறை மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?” என்று கத்தினார்கள். சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.

பேய்கள் அவரிடம், “நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்” என்று வேண்டின. அவர் அவற்றிடம், “போங்கள்” என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது. பன்றிகளை மேய்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்கள் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர். (மத்தேயு 8:28-34)
Tags:    

Similar News