ஆன்மிகம்
புனித சவேரியார்

சவேரியாருக்கு முதல் ஆலயம்

Published On 2021-05-21 13:39 IST   |   Update On 2021-05-21 13:39:00 IST
குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும்.
குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். கேட்ட வரங்களையெல்லாம் புனித சவேரியார் அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை. அதனால் தான் புனித சவேரியாரை ‘கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்‘ என்று வாயார புகழ்கிறார்கள்.

புனித சவேரியார்

கிறிஸ்தவர்களின் இதய ஆசனத்தில் வீற்றிருக்கும் புனித சவேரியார், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் 1506-ம் ஆண்டு பிறந்தார். 1529-ம் ஆண்டு புனித இஞ்ஞாசியாரை சந்தித்த பிறகுதான் சவேரியாரின் வாழ்க்கை ஆன்மிகத்துக்கு திரும்பியது. அதைத்தொடர்ந்து 1537-ம் ஆண்டு சவேரியார் குருப்பட்டம் பெற்றார். 1542-ம் ஆண்டு அவர் கோவாவுக்கு வந்தார்.

ஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். அவரது வார்த்தைகளும், செயல்பாடுகளும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை அவருக்கு பெற்றுத்தந்தன. அவர் பாடிய கத்தோலிக்க பாடல்கள் மக்களின் எண்ண ஓட்டங்களில் இடைவிடாது தவழ்ந்தன.

புனித சவேரியார் கோவாவில் இருந்து, கடற்கரை ஓரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாடுக்கு சென்று மக்களுக்கு போதனை நடத்தினார். அங்கிருந்து அடிக்கடி நாகர்கோவில் கோட்டாருக்கு அவரது பயணம் அமைந்தது.

நற்செய்தி

அந்த நேரத்தில்தான் திருவிதாங்கூர் மன்னருக்கும், பாண்டிய மன்னருக்கும் போர் நடந்தது. இந்த போரில் திருவிதாங்கூர் மன்னர் வெற்றிபெற புனித சவேரியார் உதவி புரிந்தார். இதனால் திருவிதாங்கூர் மன்னர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். தனது வெற்றிக்கு கை கொடுத்த புனித சவேரியாரை அவரும் போற்றினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க புனித சவேரியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதுள்ள சவேரியார் பேராலயத்தைச் சுற்றி ஒரு சிறிய ஆலயம் கட்ட நிலத்தையும், பணத்தையும் மன்னர் பரிசாக கொடுத்தார். அதைத்தொடர்ந்து கோட்டாரை மையமாகக் கொண்டு நற்செய்தி பணிகளை சவேரியார் மேற்கொண்டார்.

அதன்பின்னர் புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றார். இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர்நீத்தார்.

அழியாத உடல்

அவரது புனித உடல் பல மாதங்களுக்குப் பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து, இறைஊழியம் செய்து பெரும்சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

முதல் ஆலயம்

புனிதர் பட்டம் பெற்ற சவேரியாருக்கு முதல் ஆலயம், நாகர்கோவில் கோட்டார் ஆலயமாகவே இருக்க வேண்டும் என்பது இந்த மறைமாவட்டத்து மக்களின் விருப்பமாக இருந்தது. அதை நிறைவேற்றினார்கள். உலகில் புனித சவேரியாருக்கு கட்டப்பட்ட முதல் ஆலயமாக கோட்டார் ஆலயம் விளங்கி வருகிறது.

கோட்டார் மறைமாவட்ட பேராலயமாக திகழும் இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை நடத்திச் செல்கிறார்கள். அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.

சவேரியார் ஆலயம் கட்டும்போது நாகர்கோவில் அறுகுவிளை மற்றும் ராஜாவூர் மக்கள் அக்காலத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர். இதன்காரணமாக ஆண்டுதோறும் திருவிழாவின்போது இவ்வூர்களின் மக்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

கொடிபட்டத்தில் கட்டுவதற்கான பூக்கள் மற்றும் பூ மாலைகளை ராஜாவூரில் இருந்தும், நாகர்கோவில் அறுகுவிளையில் இருந்தும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புனித சவேரியார் பேராலயத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Similar News