ஆன்மிகம்
இயேசு

இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்

Published On 2021-05-17 05:10 GMT   |   Update On 2021-05-17 05:10 GMT
ஆண்டவரின் பிறப்பை முன்னறிவித்தபோது வானதூதர் குறிப்பிட்ட ‘இயேசு’ எனும் பெயருக்கு, “கடவுள் மீட்கிறார்” என்பது பொருள். இப்பெயர் அவரது தனித்துவத்தையும் பணியையும் வெளிப்படுத்துகின்றது
“கடவுளின் ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்” (I believe in Jesus Christ, God’s only Son, our Lord) என திருத்தூதர்களின் ஏற்கையின் 2ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றேன். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தார். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருள்மம் கொண்டவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.

இயேசு

ஆபிரகாமுக்கும் அவரது வழிமரபினருக்கும் வழங்கப்பட்ட மீட்பரைக் குறித்த வாக்குறுதிகளை, ரோமில் அகுஸ்து சீசரும், பாலஸ்தீனில் ஏரோது அரசனும் ஆடசி செய்த காலத்தில் கடவுள் நிறைவேற்றினார். ஆண்டவரின் பிறப்பை முன்னறிவித்தபோது வானதூதர் குறிப்பிட்ட ‘இயேசு’ எனும் பெயருக்கு, “கடவுள் மீட்கிறார்” என்பது பொருள். இப்பெயர் அவரது தனித்துவத்தையும் பணியையும் வெளிப்படுத்துகின்றது: “ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” (மத்தேயு 1:21). “நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” (திருத்தூதர் பணிகள் 4:12) என்று திருத்தூதர் பேதுரு பறைசாற்றினார்.

கிறிஸ்து

கிரேக்க மொழியில் ‘கிறிஸ்து’ என்பதும் எபிரேய மொழியில் ‘மெசியா’ என்பதும், “அருள்பொழிவு பெற்றவர்” எனப் பொருள்படும். மீட்பளிக்கும் தமது பணிக்காக இயேசு கடவுளால் திருநிலைப்படுத்தப் பெற்று, தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டதால் ‘கிறிஸ்து’ என அழைக்கப்படுகிறார். உலகிற்குத் தந்தையால் அனுப்பப்பட்ட இவரே இஸ்ரயேல் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட மேசியா. இயேசுவும் ‘மெசியா’ எனும் சிறப்பு பெயரை ஏற்றுக்கொண்டார்; அத்தோடு அதன் பொருளையும் தெளிவாக்கினார். “அவர் விண்ணத்தில் இருந்து இறங்கி வந்தவர்” (யோவான் 3:13); “பலருடைய மீட்புக்கு ஈடாக” (மத்தேயு 20:28) தம் உயிரை சிலுவையில் பலியாக்கி உயிர்த்தெழுந்தவர். ‘கிறிஸ்தவர்’ எனும் நமது பெயர் ‘கிறிஸ்து’ எனும் பெயரிலிருந்தே வருகிறது.

இறைமகன்

இயேசு தன்னிகரற்ற, நிறைவான முறையில் இறைமகனாக இருக்கிறார். அதி தூய திரித்துவத்தின் இரண்டாம் ஆளும், “கடவுளின் ஒரே மகனுமாகிய” (1யோவான் 4:9) அவர், “தந்தையோடு ஒரே பொருள்மம் கொண்டவராக” உள்ளார். இயேசுவின் திருமுழுக்கு மற்றும் உருமாற்ற நிகழ்வுகளில் தந்தையின் குரலொலி, “அன்பார்ந்த மகன்” என்று அவரை வெளிப்படுத்தியது. “தந்தையை அறிந்துள்ள” (மத்தேயு 11:27) மகன் என்று இயேசு தம்மை வெளிப்படுத்தினார்; அதன் வழியாக தந்தையாகிய கடவுளோடு தனிப்பட்ட மற்றும் நிலையான விதத்தில் தாம் உறவு கொண்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். “தந்தையின் ஒரே மகன்” (யோவான் 1:14) என்னும் நிலையில் இயேசுவின் மாட்சியைக் கண்ட திருத்தூதர்கள், அவரை “வாழும் கடவுளின் மகன்” (மத்தேயு 16:16) என்று அறிக்கையிட்டார்கள்.

ஆண்டவர்

விவிலியத்தில் ‘ஆண்டவர்’ எனும் பெயர் பொதுவாக, கடவுளின் அரசுரிமையைக் குறிக்கும். இயேசு இந்த சிறப்பு பெயரைத் தம்மைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். தமது இறை அரசுரிமையை இயற்கை, அலகை, பாவம், சாவு ஆகியவற்றின் மீது கொண்ட அதிகாரத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாகத் தமது சொந்த உயிர்ப்பிலும் வெளிப்படுத்தினார். தொடக்க காலத்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை அறிக்கைகள், இறைத்தந்தைக்கே உரிய ஆற்றலும் மாண்பும் மாட்சியும் இயேசுவுக்கும் உரியதென பறைசாற்றின; ஆகவே கடவுள் “எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்” (பிலிப்பியர் 2:9) என்று அறிக்கையிட்டன. இயேசுவே உலகத்திற்கும் வரலாற்றுக்கும் ஆண்டவர். அவர் ஒருவருக்கே நம்மை முழுமையாகக் கையளிக்க வேண்டும்.
Tags:    

Similar News