ஆன்மிகம்
பாதம் கழுவும் நிகழ்ச்சி

கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

Published On 2021-03-31 03:54 GMT   |   Update On 2021-03-31 03:54 GMT
பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 28-ந் தேதி குருத்தோலை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அன்று முதல் ஈஸ்டர் வரை புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

புனித வாரத்தில் பெரிய வியாழன் எனப்படும் பாஸ்கா வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய தினம் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார். பின்னர் அவர் "நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" என்று தனது சீடர்களிடம் கூறினார்.

அதன் நினைவாக நாளை (வியாழக்கிழமை) பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை நடைபெறும் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேர்களின் பாதங்களை கழுவுகிறார்கள். திருப்பலிக்கு பின்னர் நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனை நடக்கிறது.நாளை மாலை நடைபெறும் திருப்பலியில் "உன்னதங்களிலே" என்ற வானவர் கீதம் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கும். அதன்பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகள் ஒலிக்காது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.
Tags:    

Similar News