ஆன்மிகம்

லூர்து மாதா ஆலய ஆண்டு பெருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2019-04-27 03:39 GMT   |   Update On 2019-04-27 03:39 GMT
வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
வில்லியனூர் லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை பிச்சைமுத்து அடிகளார் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை வில்லியனூரில் உள்ள தூய லூர்து மாதா திருத்தலம் (வில்லியனூர் மாதா) வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பிரான்சு நாட்டின் லூர்து நகருக்குப்பின் உலகிலேயே லூர்து மாதாவிற்கு என்று கட்டப்பட்ட 2-வது ஆலயம் இந்த ஆலயமாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த சனிக்கிழமை ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான பெருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி அன்று காலை 5-30 மணிக்கு புதியதாக கட்டப்பட்டுள்ள அருள்நிலை ஆலயத்தில் உதகை மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. இதனை தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெறும். அதன்பின் ஆயர் கொடியேற்றி திருவிழாவினை தொடங்கி வைக்கிறார்.

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, தேர்பவனி போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் 9 நாட்களும் நடைபெறும். மே மாதம் 4-ந்தேதி ஜெபமாலை கண்காட்சியும், 5-ந்தேதி காலை 7-30 மணிக்கு புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் இரவு 7-30 மணிக்கு ஆடம்பர திருவிழா தேர்பவனி நடக்கிறது. மறுநாள் காலை 6-30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.

இவ்வாறு பிச்சை முத்து அடிகளார் கூறினார்.
Tags:    

Similar News