ஆன்மிகம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா நாளை தொடங்குகிறது

Published On 2019-03-14 03:25 GMT   |   Update On 2019-03-14 03:25 GMT
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் கடல்பகுதி கொண்டுவரப்பட்டு உள்ளது.
இந்தியா, இலங்கை இடையே கடல் பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாள் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாள் நடைபெறுகிறது.

திருவிழாவின் முதல் நாள் மாலை 5 மணிக்கு நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடி இருநாட்டு மக்கள் முன்னிலையில் ஏற்றப்படுகிறது.

தொடர்ந்து மரத்தால் ஆன பெரிய சிலுவையை இரு நாட்டு மக்களும் சுமந்து ஆலயத்தை வலம்வர 11 இடங்களில் சிலுவைப் பாதை திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்டதேரை இலங்கை கடற்படை வீரர்கள் தூக்கியபடி ஆலயத்தை ஒரு முறை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழாவின் 2-வது நாள் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகசம் தலைமையில் இருநாட்டு பங்குதந்தைகளும் இரு நாட்டு மக்களும் பங்கேற்கிறார்கள். 9 மணி வரை நடைபெறும் திருப்பலி முடிந்த பின்பு கொடியிறக்கப்பட்டு திருவிழா முடிவடைகிறது. அதை தொடர்ந்து இருநாட்டு மக்களும் தாங்கள் வந்த படகுகள் மூலமாக தங்கள் பகுதிக்கு புறப்படுகிறார்கள்.
Tags:    

Similar News