ஆன்மிகம்
வேளாங்கண்ணியில் திரளானோர் கலந்து கொண்டபோது எடுத்த படம்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

Published On 2021-03-30 02:42 GMT   |   Update On 2021-03-30 02:42 GMT
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுலா தலமாக விளங்கும் இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தின் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது வழக்கம். தவக்காலம் தொடங்கும் நாள் 'சாம்பல் புதன்' என்று அழைக்கப்படுகிறது. இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும் புனித நாட்கள் என்றும் கூறிவருகின்றனர்.

இந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் புலால் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி தொடங்கியது. தவக்காலத்தையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிள் பேரணியாகவும் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகருக்குள் கழுதை மேல் அமர்ந்து வரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பாடல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுக்கிறது. இதையொட்டி குருத்தோலை பவனி நடைபெறும்.

அதன்படி நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.

இதைத்தொடர்ந்து குருத்தோலை பவனி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக முக்கிய வீதிகள் வழியாக சென்று பேராலயத்தின் பின் பகுதியை அடைந்தனர்.

நேற்று முழுவதும் வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்குதந்தை அற்புதராஜ், உதவி பங்குதந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள்சகோதரிகள், சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News