வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கும் அம்மன்
- இதன் கருவறை ஆரம்பத்தில் கூரையாலும், பின்னர் ஓடுவேய்ந்த கட்டிடத்திலும் இருந்தது.
- இக்கோவிலில் ஆற்றுகால் பகவதி அம்மன் வடக்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில்.
இப்பகுதி கிள்ளியாறும், கரமனையாறும் சங்கமிக்கும் பகுதியாகும்.
இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இக்கோவில் கட்டப்பட்டு உள்ளது.
இதன் கருவறை ஆரம்பத்தில் கூரையாலும், பின்னர் ஓடுவேய்ந்த கட்டிடத்திலும் இருந்தது.
இக்கோவிலில் ஆற்றுகால் பகவதி அம்மன் வடக்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
ஒரு கையில் சூலமும், மறுகையில் வாளும் ஏந்தி நிற்கிறார். மற்ற கைகளில் பொங்கலும், கேடயமும் தாங்கி இருப்பார்.
அம்மன் சன்னதிக்கு இடது புறம் மாடன் தம்புரான் சன்னதி உள்ளது. இந்த சன்னதியின் பின்புறம் பனை மரம் உள்ளது.
இப்போதும் இந்த சன்னதிக்கு சென்றால் மாடன் தம்புரானின் பின்புறம் பனை மரம் உயர்ந்து நிற்பதை காணலாம்.
அன்னையின் புகழ் பரவ, பரவ ஆலயமும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
கோவிலின் முன்புறம் அலங்கார வளைவு, தெற்கிலும், வடக்கிலும் ராஜகோபுரங்கள், கிழக்கிலும் மேற்கிலும் உப கோபுரங்கள் கட்டப்பட்டன.
ஆலயத்தின் வடிவமைப்பிலும், தோற்றத்திலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. கோவிலின் சுற்றுப்புறம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.
தேவி கதைகள், ராமாயணம் மற்றும் தசாவதாரம், கண்ணகி கதை போன்றவை சிற்பங்களாக உருவாக்கப்பட்டு உள்ளது.
கோவிலின் முன்பு பிரமாண்ட நடை பந்தல், பொங்கல் வைக்க சுற்றுவட்டார பகுதிகளில் வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது.