புராண காலத்தை பிரதிபலிக்கும் திருப்புடைமருதூர் ஆலய ஓவியங்கள்
- பலவகையான பல்லக்குகள், கடிவாளங்கள் என பல்வேறு வகையான பொருட்களும் காட்சிகளும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் இடம்பெற்றுள்ளன.
- துப்பாக்கி வீரர்களுடன் வில் ஏந்திய வீரர்களும் படையில் இடம்பெற்றிருந்தனர். திருப்புடைமருதூர் ஆலய ஓவியம், சிற்பங்களில் இதை உணர முடியும்.
வெளிநாட்டுக் கப்பல்களின் வருகை, குதிரைகள் கப்பல்களின் வாயிலாக வருதல் ஆகியனவற்றை வெளிப்படுத்தல், இரண்டாவதாக பணியாளர்களுடன் உயர் அதிகாரிகள் நிற்கும் காட்சி, கொடி பிடிப்போர், பல்லக்குத் தூக்கிகள், இசைக்கருவிகளுடன் நிற்கும் இசைவாணர்கள் ஆகியோர் குறித்தும் திருப்புடைமருதூர் ஆலய ஓவியங்களில் காணலாம்.
படைவீரர் அணிவகுத்துச் செல்லல், யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை அவற்றின் அமைப்பு, பயன்படுத்தும் போர்க்கருவிகள், சண்டையிடும் முறை ஆகியனவற்றையும் சில ஓவியங்களில் காண முடிகிறது.
குதிரைகளோடு வரும் கப்பலின் ஓவியம், மாலுமிகளின் ஓவியம், அரேபிய வணிகர், போர்ச்சுகீசிய வீரர்கள், மன்னன் முன்பு குதிரைகளுக்குப் பயிற்சி அளித்தல், துப்பாக்கிகளுடன் அணிவகுத்துச் செல்லல், போர்ச்சுகீசியர் குழு மன்னனைச் சந்தித்தல் ஆகிய காட்சிகள், வெளிநாட்டவருடன் நாயக்க மன்னர்கள் கொண்டிருந்த தொடர்பினை வெளிப்படுத்துவதுடன் அவர்களது ஆயுதங்களையும் ஓவியங்கள் அறியச் செய்கின்றன.
வளையல் வியாபாரி, விலை உயர்ந்த கற்கள் விற்கும் வியாபாரி, ஆடு மேய்ப்பவர், சுமை தூக்குபவர், மீன் பிடிப்பவர், மீன்பிடி வலை, பல வகையான இசைக் கருவிகள், இசைக்கருவிகளுடன் அணிவகுத்துச் செல்லும் இசைவாணர்கள், நடனமாதர், கோலாட்டம் ஆடும் பெண்கள், வீரநடனங்கள், கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நடனமாது, சிறுத்தையுடன் சண்டையிடும் வீரர்கள், வில் வீரர்கள், யானையைப் பிடித்தல், எருதுச் சண்டை, சேவல் சண்டை, ஆட்டுக்கிடாய் சண்டை, பறவை பிடிப்பவன், பாம்பாட்டி, மல்யுத்தம் புரிவோர், பலவகையான பல்லக்குகள், கடிவாளங்கள் என பல்வேறு வகையான பொருட்களும் காட்சிகளும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் இடம்பெற்றுள்ளன.
16ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த பழங்காலத் துப்பாக்கியில் ஒருமுறை சுட்டபின் மறுமுறை சுட அதன் வெப்பம் ஆற வேண்டும். அத்துடன் வெடிமருந்தை மீண்டும் திணிக்க வேண்டும்.
இதனால் ஒருமுறை சுட்டபின் மறுமுறை சுட கால இடைவெளி ஏற்படும். ஆனால் வில்லில் இருந்து அம்பு எய்ய இவ்வளவு கால இடைவெளி ஏற்படுவதில்லை.
தொடர்ச்சியாக அம்பு எய்யலாம். இதனால் துப்பாக்கி வீரர்களுடன் வில் ஏந்திய வீரர்களும் படையில் இடம்பெற்றிருந்தனர். திருப்புடைமருதூர் ஆலய ஓவியம், சிற்பங்களில் இதை உணர முடியும்.