புண்ணிய தலங்கள்-திருப்புடைமருதூர் (புடார்ச்சுனம்)
- இத்தலம் தென் புலத்தில் மருதவனத்தில் அமைந்த காரணத்தால், கடைத்தலம் என்ற பொருள்பட, வடமொழியில் புடார்ச்சுனம் என அழைக்கப்படலாயிற்று.
- இறைவனும் புடார்ச்சுனேசுவரர் என்ற நாமத்தால் வணங்கப்பட்டு வருகிறார்.
தாமிரபரணி பாய்ந்தோடி செழிப்பைத் தந்திருக்கும் மருத மரக் காட்டுப்பகுதிக்கு ஒரு சமயம் கொடிய வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக, தன் படை பரிவாரங்களோடு மன்னன் ஒருவன் வந்திருந்தான்.
நீண்ட நேரம் அங்குமிங்கும் அலைந்து திரிந்தும், அவர்களது கண்ணில் எந்த ஒரு கொடிய விலங்கோ, வேறு பிராணிகளோ தென்படவில்லை.
இதனால் மன்னனுக்கு மனச் சோர்வும், ஏமாற்றமும் ஏற்பட்டது.
எல்லோரும் களைப்பாக சற்றே மருதமரச் சோலையில் ஓய்வெடுத் திருந்த சமயத்தில் தான் அந்த அதிசயம், மின்னல் போல் தென் பட்டு ஓடி மறைந்தது.
அதாவது, அழகிய புள்ளிமான் ஒன்று மின்னலாய் எங்கிருந்தோ பாய்ந்து வந்து அவர்களின் கண்முன்னே துள்ளிக் குதித்து ஓடி ஒளிந்தது.
இதனைக் கண்ட மாத்திரத்தில் மன்னனுக்கும், படை பரிவாரங்களுக்கும் ஒரே ஆனந்தப் பரவசம்.
துள்ளி எழுந்து, புயல் வேகத்தில் அதனைப் பின் தொடர ஆரம்பித்தனர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த மானின் இருப்பிடத்தை கண்டு பிடித்தனர்.
அதனை பிடித்து விட எண்ணிய மன்னன், தனது வில்லில் இருந்து கூரான அம்பை குறிபார்த்து எய்தான்.
அவன் வைத்த குறி எப்போதும் தப்புவதில்லை.
இப்போதும் அதே பாணியில் 'விர்'ரெனப் பாய்ந்த அம்பு, மானின் மேல் சென்று தைத்தது.
அடுத்த கணம் நடந்ததுதான் யாருமே நம்ப முடியாதது மட்டுமல்ல, எதிர்பாராத ஒன்றாகவும் அமைந்து விட்டது.
அது இறைவனின் திருவிளையாடல் அன்றோ! அம்பால் தைக்கப்பட்ட மான் முன்னிலும் விரைவாக ஓடத் துவங்கியது.
காவலாட்களும் விடாப்பிடியாய் பின்னால் துரத்திச் சென்றனர்.
ஒரு கட்டத்தில், ஓட்டமாய் ஓடிச் சென்ற மான் மிகப்பெரிய மருத மரத்தின் அருகே சென்று மாயமாய் மறைந்தும் போனது.
இதனால் தாங்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது மன்னனுக்கு.
அருகே கிடந்த கோடாரி ஒன்றை வேகமாக எடுத்தான். மருத மரத்தை பலங்கொண்ட மட்டும் ஓங்கி வெட்டத் துவங்கினான்.
அந்த வேளையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக அந்த அதிசயக்காட்சி அரங்கேறியது.
ஆம்! மான் ஓடி ஒளிந்த மருத மரத்திலிருந்து குருதி வெளிப்பட ஜோதிப்பிழம்பாய் சுயம்பு மூர்த்தியாய் இறைவன் வெளிப்பட்டான்.
அங்கே ஆயிரம் சூரியனின் ஜோதிப் பிரகாசம்.
இந்த அதிசயக் காட்சியைக் கண்ட மன்னவன், பொங்கிப் பெருகிய கண்ணீர் வெள்ளத்தில் இறைவனை மானசீகமாக வணங்கி நின்றான்.
இறைவன் தன்னை ஆட்கொண்டு, அந்த மருதவனத் தலத்தில் வெளிப்பட்ட காரணத்தால், பரம்பொருளுக்கு அவ்விடத்தில் ஒரு திருக்கோவில் எழுப்பிட உளங்கொண்டான்.
அதனால், அவ்விடத்தில் மகேசனுக்கு அதி அற்புத கலைக்கோவில் ஒன்று உருவானது.
இத்தலம் தென் புலத்தில் மருதவனத்தில் அமைந்த காரணத்தால், கடைத்தலம் என்ற பொருள்பட, வடமொழியில் புடார்ச்சுனம் என அழைக்கப்படலாயிற்று.
இறைவனும் புடார்ச்சுனேசுவரர் என்ற நாமத்தால் வணங்கப்பட்டு வருகிறார்.
இவ்வாறு, மருத மர வனத்தில் சுயம்பு மூர்த்தியாக மூன்று தலங்களில் எழுந்தருளி நூற்றாண்டுகள் பல கடந்த பின்னரும், மானசீகமாக மல்லிகார்ச்சுனம் (தலைத்தலம்), மத்தியார்ச்சுனம் (இடைத்தலம்), புடார்ச்சுனம் (கடைத்தலம்) என லட்சோப, லட்ச மக்களால் போற்றி வணங்கப்பட்டு வருகிறது.
தொன்று தொட்டு நாகரீகச் செழிப்பு மிக்க தலங்களாக இம்மூன்றும் விளங்கி வருவதோடு, எதிர்காலத்தில் இன்னும் பல நூற்றாண்டுகள் உன்னதமாய் விளங்கும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.