கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்- இந்தியா 404 ரன்னில் ஆல் அவுட்

Published On 2022-12-15 07:25 GMT   |   Update On 2022-12-15 07:25 GMT
  • அஸ்வின் 58 ரன்னிலும், குல்தீப் யாதவ் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
  • வங்காள தேசம் தரப்பில் மெகிடி, இஸ்மால் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சட்டோகிராம்:

இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று தொடங்கியது.

முதலில் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 90 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் (அவுட் இல்லை), ரிஷப்பண்ட் 46 ரன்னும் எடுத்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்ரேயாஸ் அய்யருடன், அஸ்வின் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். சதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'அவுட்' ஆனார்.

மேலும் 4 ரன்களே அவர் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி அடங்கும். எபாதத் உசேன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவின் 7-வது விக்கெட் 293 ரன்னில் விழுந்தது.

8-வது விக்கெட்டான அஸ்வின்-குல்தீப் யாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்திய அணி 102.2 ஓவரில் 300 ரன்னை தொட்டது.

மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 348 ரன் எடுத்து இருந்தது.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அஸ்வின் அரைசதம் அடித்தார். 91 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 87-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 13-வது அரைசதமாகும்.

இருவரும் சிறப்பாக ஆடியதால் இந்தியா தொடர்ந்து ரன்களை குவித்தது. 131 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 384 ரன் குவித்து இருந்தது. அஸ்வின் 58 ரன்னிலும், குல்தீப் யாதவ் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த சிராஜ் 4 ரன்னில் வெளியேற இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

வங்காள தேசம் தரப்பில் மெகிடி, இஸ்மால் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Tags:    

Similar News