சினிமா செய்திகள்

சென்சாரில் Blue Star படம் வெளியாகக்கூடாது என்று சொன்னார்கள்- பா.இரஞ்சித்

Published On 2024-02-01 05:30 GMT   |   Update On 2024-02-01 05:31 GMT
  • எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘புளூ ஸ்டார்’.
  • இந்த படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்தது.

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.



இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது, 'புளூ ஸ்டார்' படம் ரீலிசாகி நான்கு நாட்களில் ஒரு பெரிய ஹீரோ அப்படத்தை இரண்டு முறைப் பார்த்துவிட்டு, போன் செய்து நாம் ஒரு படம் பண்ணலாம் என்று ஜெயக்குமாரிடம் பேசியிருக்கிறார். இது எனக்குக் கூட நடந்தது இல்லை. ஜெயக்குமாருக்கு நடந்திருப்பது எனக்கு சந்தோசம்.

சென்சாரில் இப்படத்திற்கு பிரச்சனை இருக்காது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இப்படம் வெளியாகக்கூடாது என்பது போன்ற கருத்து வெளியானது எனக்கு ஆச்சரியம் அளித்தது. ஒருவர் மிகக் கடுமையாக படத்தை எதிர்த்தார் என்றார்கள். மூர்த்தி அண்ணனின் படம் இருப்பதை காரணமாக சொன்னார்கள். அவரை ரவுடி என்றார்கள். அவர் எங்களைப் படிக்க வைத்தவர், நிறைய பேர் எங்கள் ஊரில் படித்துக் கொண்டிருப்பதற்கு அவர்தான் காரணம். அவர் பெரிய தலைவர், அவரை எப்படி நீங்கள் ரவுடி என்று சொல்லலாம் என்று கேட்டேன்.. பின்னர் ரிவைசிங் கமிட்டிக்கு திரும்பவும் அனுப்பினோம். சில கதாபாத்திரங்களின் பெயரையும், எதிர் கிரிக்கெட் அணியின் பெயரையும் மாற்றச் சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் சென்சார் கொடுத்தார்கள்.



ஒரு படம் ஒற்றுமையைப் பேசுகிறது. ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. வேற்றுமைகளுக்கு எதிராக எல்லோரும் ஒன்று கூட வேண்டும் என்று சொல்லுகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று சொல்லும் நபர்கள் சென்சாரில் இருக்கிறார்கள். இவர்களை மீறித்தான் இப்படம் இப்போது வெளியாகி இருக்கிறது. படத்தில் எனக்கு எப்போதும் இரண்டு மூன்று காட்சிகள் தான் திருப்தி கொடுக்கும். புளூ ஸ்டார் படத்தில் ரஞ்சித் தன் தாயை பேர் சொல்லி அழைத்த தருணத்தை சொல்லி கண்கலங்கும் இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்கலங்கச் செய்தது.



அது போல் சுசீலா என்று பேர் சொல்லிக் கூப்பிட்ட ராஜேஷ், அடுத்து மனம் திருந்தி வரும் போது அம்மா என்று அழைப்பான். அவர்களும் ஒரு தாய் போல் வாஞ்சையுடன் அவனிடம் பேசுவார்கள். அது தான் எங்கள் அம்மா. ஜெயக்குமாரின் அம்மா. அதுதான் புளூ ஸ்டார். புளூ ஸ்டார் பேசுவது பொதுவில் பங்கு கோருதல் தான். வேறுபாடுகள் அற்ற இடத்தில் நாம் வாழணும். உங்கள் கோவில் தான் எங்கள் கோவில். உங்கள் தெய்வம் தான் எங்கள் தெய்வம். வாங்க, நாமெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும், என்பது தான் இப்படம் பேசுவது. அம்மாற்றத்தை விரும்புகிற மனிதர்கள் நாங்கள். இப்பிரச்சனை இப்போதும் இருப்பதால் தான் நாங்கள் பேசுகிறோம். இதைப் பேசியதாலே இப்படம் வெற்றியடையவில்லை. அதை மீறி படத்தின் செய்நேர்த்தி, அந்த தத்துவத்தை சரியான மொழியில் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதனால் தான் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது.


ஒரே சிந்தனை அரசியல் கொண்ட நபர்களைக் கூட ரஞ்சித் எதிர் திசையில் நிறுத்துவார். ஆனால் இயக்குனர் ஜெயக்குமார் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார். அவருடைய அரசியல் சிறப்பானது என்று கூட புளூ ஸ்டார் படம் குறித்து சிலர் பேசியதையும் எழுதியதையும் கவனித்தேன். அதற்காகவும் ஜெயக்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஒரே விசயத்திற்காகப் போராடினாலும் என் மொழி வேறு; ஜெயக்குமாரின் மொழி வேறு என்று பேசினார்.

Tags:    

Similar News