சினிமா
தர்பார் படத்தில் ரஜினி

சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் - தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு

Published On 2020-01-10 12:43 GMT   |   Update On 2020-01-10 12:43 GMT
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘தர்பார்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது.


இந்நிலையில், தர்பாரில் இருக்கும் வசனத்தை நீக்க தயார் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், எங்களின் தர்பார் திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதுவாக தெரியவந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு லைகா நிறுவனம் கூறியுள்ளது.
Tags:    

Similar News