சினிமா
தீபிகா படுகோனே

மக்கள் அச்சமின்றி போராடுவது பெருமை அளிக்கிறது - தீபிகா படுகோனே

Published On 2020-01-08 07:24 GMT   |   Update On 2020-01-08 07:24 GMT
மக்கள் அச்சமின்றி போராடுவது பெருமை அளிக்கிறது என பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் முகமூடி அணிந்த மர்ம கும்பல் புகுந்து மாணவர்கள், பேராசிரியர்களை கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தி நடிகை தீபிகா படுகோனே, தான் நடித்துள்ள ‘சபாக்’ படம் தொடர்பாக நடந்த விழாவில் பங்கேற்க டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் திடீரென்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு சென்றார். பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்பு போராட்டம் நடத்தும் மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். 

மேலும் மாணவர் சங்க தலைவியும், தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருமான அய்ஷி கோஷை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் பங்கேற்ற தீபிகா படுகோனே உரை எதுவும் நிகழ்த்தாமல் புறப்பட்டு சென்றார். 

இந்த நிலையில் மாணவர்கள் போராட்டம் குறித்து இன்று தீபிகா படுகோனே கூறும்போது, “மக்கள் அச்சமின்றி வெளியே வந்து குரல் எழுப்புவதை பார்த்து மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் வெளியே வருகிறார்கள் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். தெருக்கள் அல்லது எங்கிருந்தாலும் சரி அவர்கள் குரல் எழுப்புகிறார்கள். 



இதில் முக்கியம் என்னவென்றால் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். நாம் மாற்றத்தை காண விரும்பினால் இது முக்கியமானதாக இருக்கும். நாம் பயப்படவில்லை என்று பெருமைப்படுகிறேன். போராட்டத்தால் நம் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என நினைக்கிறேன். நாட்டின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்கிறோம்”.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தீபிகா படுகோனே நடித்த ‘சபாக்’ படத்தை புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. அதுபோல் தீபிகாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் ஹேஷ்டேக் இந்திய அளிவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
Tags:    

Similar News