சினிமா
பாக்யராஜ், நாசர்

ஓட்டு எண்ணிக்கை முடக்கம்.... நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தலா?

Published On 2019-12-31 09:10 GMT   |   Update On 2019-12-31 09:10 GMT
7 மாதங்களாக ஓட்டு எண்ணிக்கை முடங்கியுள்ளதால், நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடத்தினர். நாசர், பாக்யராஜ் தலைமையில் 2 அணிகள் மோதின. 2 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் ஓட்டு போட்டனர். ஆனால் 7 மாதங்களாகியும் ஓட்டுகள் எண்ணப்படவில்லை. 66 உறுப்பினர்கள் தங்கள் ஓட்டு உரிமையை பறித்து விட்டதாகவும் சிலர் தங்களுக்கு தபால் ஓட்டு சீட்டுகள் தாமதமாக கிடைத்ததாகவும் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கினால் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ஓட்டுப் பெட்டிகளை வங்கியொன்றில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதற்கு மாதம் ரூ.50 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பது தாமதம் ஆவதால் சங்க பணிகள் முடங்கி உள்ளன. சங்கத்தில் நிதி இருப்பு தீர்ந்துபோய் உறுப்பினர்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்க முடியவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.



பணம் இல்லாமல் நடிகர் சங்க கட்டிட பணிகளையும் நிறுத்தி உள்ளனர். நட்சத்திர கலை விழா நடத்தி நிதி திரட்ட திட்டமிட்டு இருந்தனர். அதுவும் நடக்கவில்லை. நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை அரசு நியமித்து விட்டது. இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் வழக்கில் வருகிற 2-ந்தேதிக்கு மேல் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஓட்டுகள் எண்ணப்படுமா? அல்லது மறுதேர்தல் நடத்தப்படுமா? என்பது தெரிய வரும் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News