சினிமா
சந்திரமுகி 2ம் பாகம் ரெடியாகிறது - பி.வாசு
சந்திரமுகி 2ம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாகவும், பெரிய பட நிறுவனம் ஒன்று அதை தயாரிக்க உள்ளதாகவும் இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து, பி.வாசு இயக்கத்தில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருந்தது. சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சந்திரமுகி படம் சாதனை புரிந்தது. “இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது” என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து ‘சந்திரமுகி’ படத்தை இயக்கிய இயக்குனர் பி.வாசு, சமீபத்திய பேட்டியில் கூறியதாவது:- “சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை நான் ஏற்கனவே கன்னடத்தில், ‘ஆப்த ரட்சகா’ என்ற பெயரில் இயக்கி விட்டேன். அந்த படம், கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.
இந்த படத்தின் கதையை மேலும் மெருகேற்றி, ஒரு தமிழ் கதாநாயகனிடம் சொல்லி இருக்கிறேன். ஒரு பெரிய பட நிறுவனத்திடமும் சொல்லி விட்டேன். ‘சந்திரமுகி-2’ படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறோம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெறுகின்றன.”
இவ்வாறு இயக்குனர் பி.வாசு கூறினார்.