சினிமா
அமேசான் காட்டுத்தீ - இந்தி பிரபலங்கள்

அமேசான் காட்டில் பயங்கர தீ -வருத்தம் தெரிவித்த பாலிவுட் பிரபலங்கள்

Published On 2019-08-23 04:38 GMT   |   Update On 2019-08-23 04:38 GMT
அமேசான் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறித்து அக்‌ஷய் குமார், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட இந்தி திரை பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
புது டெல்லி:

உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும் அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘2 வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகளில் பற்றி எறியும் தீயின் புகைப்படங்களை பார்க்கும்போது மிகுந்த மன வேதனையாகவும், அச்சமூட்டும் வகையிலும் இருக்கிறது.

இந்த காடுகள்தான் 20% ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இது நம்மில் ஒவ்வொருவரையும் பாதிக்கும். பூமி காலநிலை மாற்றத்தைத் தக்கவைக்கக்கூடும். ஆனால், நம்மால் அது சாத்தியமில்லை ’ என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து  பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், ‘அமேசான் காடுகள் கடந்த சில வாரங்களாக எரிந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான செய்தி. அமேசான் இந்த உலகின் நுரையீரலாக கருதப்படுகிறது. இப்போது இங்கு ஏற்பட்டுள்ள தீ, மிகவும் வருத்தமளிக்கிறது. உலக மீடியாக்களின் கவனத்தை இந்த சம்பவம் ஈர்க்கும் என நம்புகிறேன்’ என கூறினார்.

இதேபோல் அர்ஜூன் கபூர், பூஜா பத்ரா, ஆயுஷ்மான் குரானா ஆகிய பாலிவுட் பிரபலங்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். #AmazonRainforest, #savetheamazon போன்ற ஹேஷ்டேகுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.





Tags:    

Similar News