சினிமா
இயக்குனர் அமீர்

திரைத்துறையில் நன்றி என்பதே இல்லை - அமீர்

Published On 2019-08-22 10:47 GMT   |   Update On 2019-08-22 12:50 GMT
எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர், திரைத்துறையில் நன்றி என்பதே இல்லை என்று கூறியிருக்கிறார்.
பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்'. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படத்தைச் சார்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.

இதில் இயக்குநர் அமீர் பேசும்போது, ‘என்னுடைய வாழ்வில் கேட்டுப் பெறக் கூடாத விஷயங்கள் மூன்று வைத்திருக்கிறேன். கைத்தட்டல், வாழ்த்து மற்றும் நன்றி, கைத்தட்டுங்கள் என்று கேட்பதில் கூச்சப்படுவேன். நம் பேசுவது நன்றாக இருந்தால் கைத்தட்டல் தானாக வரும்.

நான் இந்த விழாவிற்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் தான். ஒன்று ஆரியின் வற்புறுத்தல், இரண்டாவது ராவுத்தர் பிலிம்ஸ். என்னைப் பொருத்தவரை திரைத்துறையில் புகழ் நிரந்தரமில்லை.



இப்ராஹிம் ராவுத்தர் மிக எளிமையான மனிதர். அவர் இன்று இருந்திருந்தால் இந்த அரங்கத்தில் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்திருப்பார்கள். மேடை நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கிறது. விஜயகாந்திற்கு 'கேப்டன்' என்று பெயர் வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை செதுக்கியவர் ராவுத்தர். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள்? சினிமா அவர்களைப் பிரித்து விடும். அதேபோல் தான் நானும் பாலாவும். திரைத்துறையில் நன்றி என்பது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது ஊசி அளவு தான் இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்.

சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா? நட்சத்திரம் என்பது மின்னி மறைவது, அதுபோல தான் சினிமாக்காரர்களும். ஆகவே, புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், வெற்றியடைந்தபின் மற்றவர்களையும் கைத்தூக்கி விடுங்கள். நீங்கள் வளரும் போதே உங்களுடன் பயணித்தவர்களை உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும்’ என்றார்.
Tags:    

Similar News