சினிமா
விஷால், வடிவுடையான்

வீண் பழி சுமத்துகிறார்கள்- விஷால் கால்ஷீட் விவகாரம் குறித்து வடிவுடையான் விளக்கம்

Published On 2019-08-22 09:28 GMT   |   Update On 2019-08-22 09:28 GMT
விஷால் கால்ஷீட் விவகாரத்தில் தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக இயக்குனர் விசி.வடிவுடையான் தெரிவித்துள்ளார்.
தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு போன்ற படங்களை இயக்கியவர் விசி.வடிவுடையான். இவர் மீது நரேஷ் கோத்தாரி என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகார் கொடுத்துள்ளார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- நான் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். என்னிடம் அறிமுகமான இயக்குனர் வடிவுடையான்,  கடந்த 2016-ம் ஆண்டு விஷாலை வைத்து ரூ.7 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க உள்ளதாகவும், அதற்காக விஷாலிடம் கால்ஷீட் பெற்றுள்ளதற்கான ஆவணங்களையும் காட்டினார். அதனை நம்பி வடிவுடையானிடம் 3 தவணைகளாக ரூ.47 லட்சம் கொடுத்தேன். 



ஆனால் வடிவுடையான் சொன்னபடி படம் எடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனை அடுத்து சந்தேகமடைந்து  விஷால் தரப்பில் கால்ஷீட் குறித்து கேட்டதற்கு அது போன்ற எந்த கால்ஷீட்டும் வடிவுடையானுக்கு வழங்கவில்லை என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். வடிவுடையான் என்னை மோசடி செய்துவிட்டார்’. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. நேற்று திரையுலகில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து இயக்குனர் விசி.வடிவுடையான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ’இன்று காலை முதல் என்னை பற்றி தவறான செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. சுரேஷ் கோத்தாரி என்பவர் நான் அவரிடம் விஷாலை வைத்து படம் இயக்குவதாக கூறி 47 லட்சம் பணம் கடன் வாங்கிகொண்டு திருப்பி தரவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது முற்றிலும் தவறானது. சுரேஷ் கோத்தாரி யார் என்றே எனக்கு தெரியாது. அவருக்கும் எனக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை.



நான் கடந்த ஆண்டு அசோக் லோதா என்பவரிடம் ரூபாய் 3 லட்சம் கடனாக பெற்றேன். அதற்காக நிரப்பப்படாத காசோலை மற்றும் என் கையெழுத்திட்ட   பத்திரம் போன்றவற்றை கொடுத்து பணம் பெற்றேன். ஆனால் அந்த தொகையை வட்டியும், முதலுமாக அவருக்கு திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் அவர் என் காசோலையையும், பத்திரத்தையும் திருப்பி தர மறுத்ததால், நான் அவர்மீது சென்னை 6 வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். 

அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதனால் கோபமடைந்த அசோக் லோதா எனது நிரப்பப்படாத காசோலையையும், பத்திரத்தையும் சுரேஷ் கோத்தாரியிடம் கொடுத்து அதில் நான் அவரிடம் பணம் பெற்றது போல் நிரப்பி  தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று எனக்கு சந்தேகம் உள்ளது. எனது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிப்பதற்காக இது போல் பொய்யான பழியை என்மீது சுமத்தியுள்ள அவர்கள் மீது நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News