சினிமா

நள்ளிரவில் மீண்டும் போலீசில் சிக்கிய ஜெய்

Published On 2018-06-28 05:50 GMT   |   Update On 2018-06-28 05:50 GMT
காரில் அதிக இரைச்சல் தரும் கருவியை பொருத்தியதாக போலீசார் சோதனையில் சிக்கிய நடிகர் ஜெய்க்கு அபராதம் விதித்த போலீசார், அவரை வைத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் எடுத்தனர். #Jai
நடிகர் ஜெய் நள்ளிரவில் மது அருந்திவிட்டு சென்னையில் தனது சொகுசு காரில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்தியதாக கடந்த வருடம் போலீசில் சிக்கினார்.

இதையடுத்து ஜெய்யின் காரை பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டது. வழக்கு விசாரணையில் ஜெய் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டில் அவர் ஆஜரானார். கோர்ட்டு உத்தரவுப்படி அவரது ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் அருகே இரவு போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பாட்டில் சைலன்சர் என்ற அதிக இரைச்சல் எழுப்பிய கருவியுடன் வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தினர். 

காருக்குள் நடிகர் ஜெய் இருப்பதை பார்த்ததும், ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி போக்குவரத்து விதிகளை மீறி இரைச்சலுடன் காரை ஓட்டலாமா? என்று அறிவுரை கூறினர். உடனே காருக்குள் இருந்த ஜெய் கீழே இறங்கி வந்து வருத்தம் தெரிவித்தார். இனிமேல் இதுபோல் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தார். 



அவரை வைத்து போலீசார் விழிப்புணர்வு வீடியோவை எடுத்தனர். அந்த வீடியோவில் நடிகர் ஜெய், ‘‘இது என்னுடைய கார்தான். இதுபோல் அதிக இரைச்சலுடன் யாரும் கார் ஓட்டக்கூடாது. இதனால் பள்ளிகள், ஆஸ்பத்திரிகளில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். இரைச்சல் சைலன்சர் வைத்து யாராவது கார் ஓட்டினால் போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பார்கள்’’ என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதுதொடர்பாக நடிகர் ஜெய்க்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். #Jai

Tags:    

Similar News