சினிமா

சிட்னி திரைப்பட விழாவில் நந்திதா தாஸ் இயக்கிய படம்

Published On 2018-06-11 14:32 GMT   |   Update On 2018-06-11 14:32 GMT
தமிழில் அழகி, நீர்ப்பறவை, கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் நடித்த நந்திதா தாஸ் இயக்கியுள்ள படம் சிட்னி திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
சிட்னியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நடைபெறும் சிட்னி திரைப்பட திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்நிகழ்வில் திரையிடப்படும் படங்கள் பெரும்பாலும் புதிய படைப்பாளிகளின் திரைப்படங்களாகவும், உண்மைச் சம்பவங்கள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளை மையப்படுத்திய படங்களாகவும் இருக்கும். 

இந்த 200 படங்களிலிருந்து திரைக்கதை, அந்தத் திரைக்கதையைத் தைரியமாக திரையாக்கிய விதம், ரசிகர்கள் அந்தப் படத்தை ரசித்த விதம் எனப் பல்வேறு வி‌ஷயங்களைக் கருத்தில் கொண்டு 12 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஒவ்வொன்றிற்கும் 60,000 டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

இந்தத் திரைப்பட விழாவில்தான் நந்திதா தாஸ் இயக்கியிருக்கும் ‘மன்ட்டோ ‘ திரையிடப்படவிருக்கிறது. இப்படத்தில் சதக் ஹாசன் மன்ட்டோவாக பாலிவுட்டின் வித்தியாசமான பல கதாபாத்திரங்களுக்குச் சொந்தக்காரரான நவாசுதின் சித்திக் நடித்துள்ளார். மண்டோ என்ற எழுத்தாளர் தனது சிறுகதைகள் மற்றும் நாவல்களை இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததனால் மக்கள் அடைந்த துயரங்களை மையப்படுத்தியே எழுதியிருந்தார். 

இதனால் மன்ட்டோவின் படைப்புகளை வெளியிட அன்றைய காலனிய அரசு பல்வேறு தடைகளை விதித்திருந்தது. அந்தத் தடைகளை எதிர்த்துப் போராடி எழுதுவதற்குத் தனக்கு இருக்கும் உரிமையைப் பெற்று பல்வேறு கதைகள் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது இறுதி நாள்கள் குடியால் கழிந்தன. அதனால் தன்னுடைய உடலுறுப்புகள் செயலிழந்து 1955ல் தனது 42வது வயதில் இறந்தார். 

‘மன்ட்டோ ‘ திரைப்படம் இது அத்தனையையும் பேசவிருக்கிறது. படம் பற்றி நந்திதா தாஸ் கூறும்போது, “இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். அதற்குமுன் உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் மக்கள் இப்படத்தை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். சினிமாவின் சக்தியே நாடுகளையும் கலாசாரத்தையும் எளிதில் கடந்துவிடுவதுதான். இந்தக் கதை இந்தியாவைச் சேர்ந்தது என்றாலும் உலகின் பிற பகுதியிலிருக்கும் மக்களும் எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கும்” என்றார்.
Tags:    

Similar News