2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு வரும் இடம் ஆறாகும் வாழ்க்கை இனி ஜோராகும்!
கன்னி ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், 26.4.2025 அன்று 6-ம் இடத்திற்கு வருகிறார். 6-ல் ராகு இருந்து குருகேந்திரத்தில் இருந்தால் 'அஷ்டலட்சுமி யோகம்' உருவாகும். அந்த யோகம் குருப்பெயர்ச்சிக்கு பின்னால் செயல்படும். அதே நேரம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே விரயங்கள் கூடுதலாக இருக்கும்.
எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றை குறிக்கும் இடமான 6-ம் இடத்திற்கு ராகு வரும் பொழுது, மறைமுக எதிர்ப்பு அதிகரிக்கும். மனக் கவலை கூடும். திறமை மிக்கவர்களாக நீங்கள் இருந்தாலும் சில காரியங்களை செய்ய இயலாமல் போகலாம். வரவை காட்டிலும் செலவு கூடும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்கி உங்களை சோதித்து பார்ப்பார்கள்.
விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், விரயங்கள் கூடுதலாக இருக்கும். அந்த விரயத்தை சுப விரயமாகவே மாற்றிக்கொள்வது நல்லது. இது போன்ற நேரங்களில் வீடு கட்டுவது, வீடு வாங்குவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். மதிப்பும், மரியாதையும் உயரும். புதிய கூட்டாளிகளால் தொழிலில் லாபம் குவியும். இக்காலத்தில் உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.4.2025 முதல் 31.10.2025 வரை)
பூரட்டாதி நட்சத்திரக் காலில் குரு சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, சுப விரயங்கள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். அழகான வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற எண்ணம் கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர். ஆன்மிக சுற்றுலாக்கள் மகிழ்ச்சியை தரும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
சுய சாரத்தில் ராகு சஞ்சாரம் (1.11.2025 முதல் 9.7.2026 வரை)
சதய நட்சத்திரக் காலில் தனது சுய சாரத்தில் ராகுபகவான் சஞ்சரிக்கும் பொழுது, எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளை மாற்றுவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். தற்காலிக பணியில் இருந்தவர்கள் நிரந்தரப் பணிக்கு மாறும் வாய்ப்பு உண்டு. ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் கூடுதல் சலுகையும் கிடைக்கும். உங்கள் வேலையில் குறை கூறிய மேலதிகாரிகள் இப்பொழுது மனம் மாறுவர். கடன் சுமை குறையும்.
சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)
உத்ரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது விரயங்கள் மிக மிக அதிகரிக்கும். எவ்வளவு விழிப்புணர்ச்சியோடு செயல்பட்டாலும், போராட்டங்களை சந்திக்கும் சூழல் வரத்தான் செய்யும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்.
இடமாற்றம் இனிமை தராது. தொழில் நடத்துபவர்கள், உத்தியோகத்திற்குச் செல்லலாமா? என்று சிந்திப்பீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் மனக்கலக்கம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.
சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)
பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது அற்புதமான பலன்களை காணப் போகிறீர்கள். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக அமையும். வருமானம் உயரும். எந்த நேரத்தில் எதை செய்ய நினைத்தாலும் செய்ய இயலும் அளவிற்கு பொருளாதார நிலை இடம் கொடுக்கும். நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு அதிகாரிகள் ஆச்சரியப்படுவர். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.
சனிப்பெயர்ச்சி காலம்
6.3.2026 அன்று சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்பொழுது உங்களுக்கு கண்டகக் சனியின் ஆதிக்கம் உருவாகிறது. எனவே மன அமைதி குறையும். குடும்பத்தில் சலசலப்பு அதிகரிக்கும். வந்த வரன்கள் வாசலோடு நிற்கும். எதிர்பார்த்த காரியங்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தொழில் கூட்டாளிகள் தொல்லை தரும் கூட்டாளியாக மாறுவர். எதிர்காலத்தை பற்றிய பயம் அதிகரிக்கும். ஆரோக்கிய தொல்லையால் விரக்தி ஏற்படும். பொது வாழ்வில் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். இக்காலத்தில் கவனத்தோடு செயல்படுவது நல்லது.
குருப்பெயர்ச்சி காலம்
ராகு - கேது பெயர்ச்சி காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. வருகிற 11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதன் பலனால் குடும்ப ஸ்தானம் பலமடைகிறது. எனவே குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.
வீடு வாங்கும் யோகம் உண்டு. தாய்வழி ஆதரவு திருப்தி தரும். சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், அதிசாரமாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். எனவே இடம், பூமியால் ஆதாயம் உண்டு. எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். கடன் சுமை எவ்வளவு கூடினாலும் அதை படிப்படியாக கொடுக்க வாய்ப்புகள் உருவாகும்.