ரிஷபம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

Published On 2025-04-22 08:49 IST   |   Update On 2025-04-22 08:52:00 IST

ராகு வரும் இடம் பத்தாகும் வந்த தொகையோ சொத்தாகும்

ரிஷப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், 26.4.2025 அன்று உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அது தொழில் ஸ்தானம் என்பதால், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். அதேநேரம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீடு வாங்கும் யோகம் அல்லது கட்டும் யோகம் உண்டு.

ஜாதகத்தில் 10-ம் இடம், தொழில் முன்னேற்றத்தைக் குறிப்பதாகும். அந்த இடத்தில் ராகு பகவான் வரும்பொழுது, செய்யும் செயல்கள் வெற்றி பெறும். திடீர் முன்னேற்றம் ஏற்படும். வேகமும், விவேகமும் கலந்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து அலைமோதும்.

தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கான சலுகையை வழங்க முன்வருவர். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். அதிகப் பிரயாசை எடுத்தும் சில காரியங்கள் முடிவடையாமல் போகலாம். வீடு வாங்குவது, இடம் வாங்குவது, கட்டிய வீட்டைப் பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது. கேது ஞானகாரகன் என்று அழைக்கப்படுவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பட்ட மேற்படிப்பு படிக்க வாய்ப்புகள் உருவாகும். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம்.

குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.4.2025 முதல் 31.10.2025 வரை)

பூரட்டாதி நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, மன நிம்மதி குறையும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகம் என்பதால், அவரது நட்சத்திர சாரத்தில் உலாவரும் போது எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். சுய ஜாதகத்தில் குரு- சுக்ரப் பார்வை இருப்பவர்களுக்கு இக்காலம் இனிய காலமாக அமையலாம். என்றாலும் விரயங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரென மாற்றங்கள் ஏற்படும்.

சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)

உத்ரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது, உடல்நலனில் மிகுந்த கவனம் தேவை. உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது. கடன்சுமை கூடிக்கொண்டே செல்லும். கல்வி சம்பந்தப்பட்ட முயற்சியில் தடைகள் உண்டாகும். குடும்பப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். கொள்கைப்பிடிப்போடு செயல்பட இயலாது. கடுமையாக முயற்சித்தும் ஒருசில காரியங்கள் கைகூடாமல் போகலாம். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை.

சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)

பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, வசதி வாய்ப்புகள் பெருகும். வாகன யோகம் உண்டு. 'தொழில் பங்குதாரர்களை விலக்கிவிட்டுத் தனித்து இயங்கலாமா?' என்று யோசிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க அதிகம் செலவிடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் தொழில் சூடுபிடிக்கும். மனச் சஞ்சலம் உண்டாகும். அரைகுறையாக நின்ற கட்டிடப்பணியைத் தொடருவீர்கள். அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கு திடீரெனப் பொறுப்புகள் மாற்றப்படும்.

சனிப்பெயர்ச்சி காலம்

6.3.2026 அன்று சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கிறார். அப்போது லாப ஸ்தானம் பலப்படுகிறது. எனவே வருமானம் உச்சத்தை எட்டும். மனத்தெளிவோடு பணிபுரிவீர்கள். புதிய பாதை புலப்படும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளை வழங்கி லாபத்தைக் குவிப்பீர்கள். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களுக்கு கிடைத்த வெளிநாட்டு வாய்ப்பு இப்பொழுது உங்களுக்கும் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சி காலம்

ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. மே 11-ந் தேதி மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அப்போது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரலாம். நாடு மாற்றம், வீடு மாற்றம் உண்டு. ஆரோக்கியத் தொல்லை அகலும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரமும் அதற்கு இடம் கொடுக்கும்.

குடும்ப ஒற்றுமை பலப்படும். அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், கடக ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாகிச் செல்கிறார். அப்போது அதன் பார்வை பலத்தால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். புதிய திட்டங்கள் வெற்றி பெறும்.

Similar News