மீனம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்8.10.2023 முதல் 25.4.2025 வரை

Published On 2023-10-04 04:19 GMT   |   Update On 2023-10-04 04:23 GMT
மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே பிரவேசிக்கப் போகிறார். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்திற்கு கேது வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் இந்த இடத்தில் சஞ்சரித்து, நட்சத்திரப் பாதசாரங்களின்படி பயணித்து பலன்களை வழங்குவார்கள். பொதுவாக ஜென்மத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் இருந்தால் சர்ப்பதோஷ ஆதிக்கம் என்று சொல்வார்கள். எனவே சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்வது நல்லது.

உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு, இப்பொழுது ஜென்ம ராசிக்கு வருகிறார். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த கேது சப்தம ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே குடும்பத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. முன் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தளரவிட வேண்டாம். பொருளாதாரம் திருப்திகரமாக இருந்தாலும், விரயங்கள் கூடும். அடிக்கடி மாற்றங்களைச் சந்திப்பீர்கள். வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க சுபவிரயங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தகராறு செய்தவர்கள் தானாக விலக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். சப்தம ஸ்தானத்தில் கேது இருப்பதால், வாழ்க்கைத் துணையோடு அனுசரித்துச் செல்வதன் மூலம் மட்டுமே அமைதி காண இயலும். குடும்பச் சுமை கூடும்.

குரு மற்றும் சனி வக்ர காலம்

8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறும்பொழுது மிகக் கவனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அடிக்கடி இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் வந்து கொண்டேயிருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலாது. வீண்பழிகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். அவரது வக்ர காலத்தில் சஞ்சலங்கள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு லாபாதிபதி யாகவும், விரயாதிபதியாகவும் சனி இருப்பதால், லாபம் முழுவதும் விரயமாகும். நல்ல சந்தர்ப்பங்கள் வந்தாலும் அதை பயன்படுத்த இயலுமா? என்பது சந்தேகம்தான்.

சனிப்பெயர்ச்சி காலம்

20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். இப்பொழுது ஏழரைச் சனி ஆரம்பமாகிவிட்டது. அடுத்த 7½ ஆண்டுகளுக்கு சனிக்கிழமை விரதமும், சனீஸ்வர வழிபாடும் அவசியம். இரண்டாவது சுற்று நடப்பவர்கள் ஓரளவு நற்பலன்களைப் பெறுவார்கள். இருப்பினும் விரயங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

குருப்பெயர்ச்சி காலம்

1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிநாதன் குரு, சகாய ஸ்தானத்திற்கு செல்வது யோகம்தான். அவரது பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே கல்யாண முயற்சிகள் கைகூடும். கொடுக்கல்- வாங்கல் சுமுகமாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். இடம் வாங்கும் யோகம் உண்டு.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ஜென்ம ராகுவாகவும், சப்தம கேதுவாகவும் இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கையே அமையும். பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்லுங்கள். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு திடீர் இடமாற்றம் வரும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

ஜென்ம ராகுவால் சிறப்பான வாழ்க்கை அமையவும், சப்தம கேதுவால் தடைகள் அகலவும், இல்லத்து பூஜையறையில் நாக கவசம் பாடி ராகு-கேதுக்களை வழிபட்டு வாருங்கள்.

Similar News