சிம்மம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

Published On 2025-04-22 08:57 IST   |   Update On 2025-04-22 09:00:00 IST

சப்தம ஸ்தானத்தில் வரும் ராகு சஞ்சலம் தந்திடும் நேரமிது!

சிம்ம ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், 26.4.2025 அன்று 7-ம் இடம் எனப்படும் களத்திர ஸ்தானத்தில் பெயர்ச்சியாகிறார். அதே சமயம் கேது பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அதே இடத்தில் சஞ்சரித்து, அங்குள்ள நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள். குறிப்பாக சப்தம ஸ்தானத்தில் வரும் ராகு சனியோடு இணைந்து செயல்படுவதால் நிதானமும், பொறுமையும் தேவைப்படும் நேரம் இது.

உங்கள் ராசிக்கு 7-ம் இடமான சப்தம ஸ்தானத்திற்கு ராகு வருகிறார். அதனை களத்திர ஸ்தானம் என்பார்கள். எனவே வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் இடத்திற்கு ராகு பகவான் வருகிறார். இதன் விளைவாக திருமணம் கைகூடும். நிறைய வரன்கள் வந்து அலைமோதும். இடமாற்றம், வீடு மாற்றம் எளிதில் அமையும்.

ஜென்ம ராசியில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கிய தொல்லைகள் கூடுதலாக தான் இருக்கும். மாற்று மருத்துவம் உடல் நலத்தை சீராக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். மன பயம் இடையிடையே தலை தூக்கும்.

எதிர்மறை சிந்தனைகளால் சில குழப்பங்கள் ஏற்படும். புதியவர்களை நம்பி செயல்பட வேண்டாம். பொருளாதார நெருக்கடி அகலும். கணிசமான தொகை கைகளில் புரண்டாலும் உடனுக்குடன் செலவாகி கலக்கத்தையும் ஏற்படுத்தும்.

குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.4.2025 முதல் 31.10.2025 வரை)

பூரட்டாதி நட்சத்திரக் காலில் குரு சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, பஞ்சம - அஷ்டமாதிபதி குரு என்பதால் இக்காலத்தில் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாங்க நினைத்த சொத்தை வாங்குவது, கொடுக்க நினைக்க சொத்தை கொடுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி அகலும். தொழிலில் முன்னேற்றம் கருதி முக்கியஸ்தர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.

சுய சாரத்தில் ராகு சஞ்சாரம் (1.11.2025 முதல் 9.7.2026 வரை)

சதய நட்சத்திரக் காலில் தனது சுய சாரத்தில் ராகுபகவான் சஞ்சரிக்கும் பொழுது, விடிந்தது முதல் இரவு வரை வியர்வை சிந்த உழைக்கும் சூழ்நிலை உருவாகும். இழந்தவற்றை பெறமுடியாது என்றாலும் இயன்றவரை பாடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் கூடும். கணக்கு வழக்குகளை கச்சிதமாக வைத்துக்கொள்வது நல்லது. தொழில் போட்டி அதிகரிக்கும். அரசு வழி தொல்லைக்கும் ஆட்பட நேரிடும். வீடு மாற்றம், இட மாற்றம் நன்மை தரும்.

சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)

உத்ரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது, சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் இருக்கிறீர்கள். எனவே மிகமிக கவனமாக இருக்க வேண்டும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் செலவுகள் வந்து சேரும். குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டால் உறவினர் பகை அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகள் உங்களை விட்டு விலக நேரிடும். எதிர்மறை சிந்தனை அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும்.

சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)

பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பயணங்கள் பலன் தரும் விதம் அமையும். நினைத்ததை சாதிக்கும் வல்லமை பிறக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டு புதிய வாகனங்களை வாங்கும் எண்ணம் கைகூடும். உடன் பிறப்புகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வாங்கிய இடத்தில் வீடு கட்டும் யோகம் உண்டு.

சனிப்பெயர்ச்சி காலம்

6.3.2026 அன்று சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சியாகி செல்கிறார். இதன் விளைவாக உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி அடியெடுத்து வைக்கிறார். எனவே விரயங்கள் மிக மிக அதிகரிக்கும். வீடு மாற்றம், இட மாற்றம் உறுதியாகும். உழைப்பு அதிகரிக்கும்.

ஊதியம் குறைவாகவே இருக்கும். குடும்பத்தில் எந்த நேரமும் சலசலப்பும், சச்சரவுகளும் ஏற்படும். கடமையில் தொய்வு ஏற்படும். உறவினர் பகை அதிகரிக்கும். சுப காரியங்களுக்காக செலவிட்டால் வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும்.

குருப்பெயர்ச்சி காலம்

ராகு - கேது பெயர்ச்சி காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. வருகிற 11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதன் விளைவாக சகோதர ஒற்றுமை பலப்படும். உடன் பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்களை முன் நின்று நடத்தி வைப்பீர்கள்.

தொழிலுக்கான மூலதனத்தை பெற்றோர் கொடுத்து உதவுவர். பெற்றோரின் மணி விழாக்கள், பவள விழாக்கள் நடத்த முடிவு செய்வீர்கள். அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், அதிசாரமாக கடக ராசிக்கு செல்கிறார். இதன் விளைவாக எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். மதிப்பும், மரியாதையும் உயரும்.

Similar News