மிதுனம் - ஆண்டு பலன் - 2026

2025 புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-01-01 09:39 IST   |   Update On 2025-01-01 09:41:00 IST

வழிபாட்டின் மூலமே வளர்ச்சி காணலாம் மிதுன ராசி நேயர்களே!

ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் ஆதிக்கத்தால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே சென்ற ஆண்டைக் காட்டிலும் சிறப்பு மிக்க ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகின்றது. மேலும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் செயல்படும் காரியங்களில் வெற்றியும், திடீர் மாற்றங்களும் வரலாம். குரு வக்ர இயக்கத்தில் இருப்பதால் பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும்.

புத்தாண்டின் கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் குருவால் பார்க்கப்படுகிறார். எனவே வருடத் தொடக்கமே உங்களுக்கு வசந்தமாக அமையப்போகிறது. இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பார்த்தபடி அமையலாம். நல்ல சம்பவங்கள் நடைபெறும் நேரம் இது. கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையைச் சரிவரச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.

வருடத் தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் உள்ள குரு வக்ரம் பெற்றிருக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது யோகம்தான். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருக் கிறார். எனவே யாருக்கேனும் வாக்குறுதி கொடுத்தால் யோசித்துக் கொடுக்கவும். சில சமயங்களில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற இயலாமல் போகலாம்.

கும்ப - ராகு, சப்தம - கேது

26.4.2025 அன்று ராகு-கேதுக் களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் ராகுவும், 3-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். பாக்கிய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கப் போவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தந்தை வழி உறவில் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உயர் அதிகாரிகள், உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சகோதர ஸ்தானத்திற்குச் செல்லும் கேதுவால், சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. இக்காலத்தில் யோகபலம் பெற்றநாளில் உங்களுக்கு பலன்தரும் ராகு-கேதுக் களின் சன்னிதியைத் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் நிம்மதி கிடைக்கும்.

மிதுன - குரு சஞ்சாரம்

11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவாகிறது. ஜென்ம குருவாக இருந்தாலும் நன்மை கிடைக்கும். 5-ம் இடத்தை குரு பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமடைகிறது. கல்யாணக் கனவு நனவாகும். 'கூட்டுத் தொழிலில் இருந்து விலகித் தனித்து இயங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். முன்னோர்கள் கட்டிவைத்த சிதிலமடைந்த கோவில்களை திருப்பணி செய்ய எடுத்த முயற்சி கைகூடும்.

குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடன் இருக்கும் நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். கல்யாண முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணை வழியே நன்மை வந்துசேரும். மனக்கசப்பு மாறும். வெளிநாட்டு முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மூன்றாம் நபர்களின் குறுக்கீட்டால் வந்த பிரச்சினை அகலும். தொழில் மாற்ற சிந்தனை வெற்றி பெறும்.

குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் அந்த இடம் புனிதமடைகிறது. பாக்கிய ஸ்தானம் பலம்பெறும் இந்த நேரத்தில் தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். பட்ட துயரங்களில் இருந்து விடுபடும் வாய்ப்பு உண்டு. பணவரவு உச்சத்தை எட்டும். உயர் அதிகாரிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து சில பொறுப்புகளை ஒப்படைப்பர். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.

கும்ப - சனி சஞ்சாரம்

வருடத் தொடக்கம் முதல் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 3, 6, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. உடன் பிறந்தவர் களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். நாடு மாற்றம், வீடு மாற்றம் நன்றாக நடைபெறும். தொழில் கூட்டாளிகள் வருமானம் வரும் வழியை எடுத்துரைப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். ஒருசிலருக்கு சுயதொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

கடக - குரு சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்குச் செல்லும் குரு பகவான், 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். அங்கு 19.12.2025 வரை இருக்கும் அவர், உச்சம் பெற்று பலம் பெறுகிறார். அவரது பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் நல்ல சந்தர்ப்பங்கள் நாளும் வந்துசேரும்.

எதிரிகளின் தொல்லை குறையும். என்றாலும் கேதுவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், புதிய முயற்சிகளில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த இடர்பாடுகள் அகலும்.

அஷ்டமத்தில் குரு பார்வை பதிவதால் தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். கடின முயற்சிக்குப் பிறகு சில காரியங்கள் கை கூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பணியாளர்களின் தொல்லை உண்டு என்றாலும் அதை சரிசெய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள்.

குரு பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் ஒப்பந்தங்கள் படிப் படியாக வரும். வியாபாரத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம். பணியாளர்களால் வந்த பிரச்சினை அகலும். விலகிச் சென்ற பணியாளர்களை மீண்டும் சேர்க்க முன்வருவீர்கள். வியாபார விருத்திக்காக கேட்ட இடத்தில் கடனுதவி கிடைக்கும்.

குருவின் வக்ர காலம்

18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுனத்திலும் குரு வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் தடையாக இருந்த காரியங்கள் தானாக நடைபெறும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம்.

குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் லாபம் காண்பீர்கள். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த மந்த நிலை மாறும். சுபச்செலவுகள் உண்டு.

சனியின் வக்ர காலம்

2.7.2025 முதல் 17.11.2025 வரை, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். அஷ்டமாதிபதியாக சனி விளங்குவதால், அதன் வக்ர காலத்தில் இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து லாபத்தை குவிக்கும். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால் சில இடையூறுகளும் வந்துசேரும்.

உறவினர், நண்பர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எனவே இக்காலத்திலும் சனி - செவ்வாய் பார்வைக் காலத்திலும் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும்.

Similar News