மகரம் - ஆண்டு பலன் - 2026

2026 புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-12-23 17:18 IST   |   Update On 2025-12-23 17:20:00 IST

உழைக்கும் ஆர்வம் மிகுந்த மகர ராசியினரே உழைப்பினால் காரியம் சாதிக்கும் மகர ராசியினருக்கு 2026ம் ஆண்டு. ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இது வரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும்.பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். வசீகரமான தோற்றம் ஏற்படும். எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் பலமும் உண்டாகும். அனைவரும் வியக்கும் வகையில் வாழ்க்கை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும்.

குருவின் சஞ்சார பலன்கள்

மகர ராசிக்கு 3,12ம் அதிபதியான குரு பகவான் ஆண்டின் துவக்கத்தில் மே மாதம் வரை குரு பகவான் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். ஜூன் மாதம் முதல் சம சப்தம ஸ்தானத்தில் உச்சமடைந்து ராசியை பார்ப்பார்.ஆன்ம பலம் பெருகி சுறுசுறுப்பாக தைரியத்துடன் இருப்பார்கள். குடும்ப உறவுகளை குறிப்பாக உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வதால் கவலைகள் குறையும். இதனால் உடலில் இருந்த நோய்கள் நீங்கும் மன சஞ்சலங்கள் கவலைகள் கஷ்டங்கள் நீங்கி புதிய தெம்பு பிறக்கும். உங்கள் செல்வாக்கு கண்டு உறவினர்கள் கண் திருஷ்டி ஏற்படும். தடைப்பட்ட திருமண வாய்ப்புகள் கூடிவரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தடைபட்ட பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நிறைவேறும். சிலருக்கு அவ்வப்போது ஞாபக சக்தி குறையும். கண், காது, மூக்கு தொடர்பான பாதிப்புகள் வரலாம். அடமானத்தில் இருந்த வீடு, வாகனம், நிலபுலன், நகை அனைத்தும் மீண்டு வரும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் குடும்ப பாரத்தை சுமக்க நேரும். திருமணத் தடை அகலும். அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும். கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்றால் ஆனந்தமான வாழ்க்கை அமையும்.சிலர் வாழ்க்கைத் துணையின் பெயரில் தொழில் துவங்கலாம்.

சனியின் சஞ்சார பலன்கள்

2026ம் ஆண்டு முழுவதும் வெற்றி ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பார். மீண்டும், மீண்டும் வெற்றி வாய்ப்புகள் குவியும். தொழில் வளம் சிறக்கும்.அரசாங்க ,வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். தொழிலில் சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. தாராள தனவரவு வந்து கொண்டே இருக்கும்.கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாகனம் வாங்க, வீடு கட்டும் பணி தொடர தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவார்கள். புதிய சொத்துக்கள் சேரும். புத்திர பிராப்தம் கிட்டும்.வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். சிலர் மைத்துனருடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். சிறு பிரச்சினைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள், சகோதர, சகோதரிகள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து, கேரண்டி கையெழுத்து போடுவதை தவிர்க்கவும்.சிலர் பிள்ளைகள் உயர் கல்வி அல்லது உத்தியோகத்திற்காக வெளியூர் செல்லலாம்.

ராகு-கேதுவின் சஞ்சார பலன்கள்

ஆண்டின் துவக்கத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானும் அஷ்டம ஸ்தானத்தில் கேது பகவானும் சஞ்சரிக்கிறார்கள். தடை தாமதமான முயற்சிகள் காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும்.சொத்து, சுகம், தடையில்லாத வருமானம் என வாழ்வில் புது விதமான மாற்றங்கள் அதிகரிக்கும். குடும்ப சுமை குறையும்.வீண் பிடிவாதம், முன் கோபம் குறையும். தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுப்பீர்கள். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும்.வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியல் வாதிகள் கவனமாக திட்டமிட்டு காய் நகர்த்த வேண்டிய காலம் .வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் நிற்கும் ராகு பகவான் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்கை கொடுக்க வைத்து எட்டாம் இட கேது மூலம் வம்பு வழக்கை வீட்டு வாசலில் நிறுத்துவார்.வாக்குறுதியே உங்களை கட்டம் கட்டி நிற்க வைக்கும் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. கொள்கை கோட்பாடுடன் தூய்மையாக செயல்பட்டால் நிலைக்கலாம். நீடிக்கலாம். சந்தர்ப்பவாதியாக செயல்பட்டால் வீழ்ச்சியை சந்திப்பதில் சந்தேகம் இல்லை.

உத்திராடம் 2,3,4

மேன்மையான பலன்கள் உண்டாகும் வருடம். உங்களின் பேச்சுத் திறமையால் பிறரை ஈர்க்கும் சக்தி உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு, வாழ்க்கை முன்னேற்றம் போன்ற அனைத்தும் சீராக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற நேரும். ஒரு சிலர் நாடு விட்டு நாடும் மாறலாம். திருமண யோகம் தாமதப் பட்டவர்களுக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு வேலை மாற்ற எண்ணம் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. நீங்கள் விரும்பிய அப்பார்ட்மென்டில் விரும்பிய வீடு கிடைக்கும்.உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். போதுமான பணம் கிடைத்தாலும் செலவுகளும் மிகுதியாக இருக்கும். திருமணத் தடை நீங்கும்.பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும்.இந்த வருடத்தில் திருமண முயற்சி கைகூடும். கால பைரவரை வழிபடவும்.

திருவோணம்

வாழ்க்கையில் செட்டில் ஆகும் காலம் வந்துவிட்டது. உங்களின் லைப் ஸ்டைல் மாறப் போகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும். இதுவரை வேலை இன்மை மற்றும் தொழில் ஏற்ற இறக்கத்தால் பொருளாதார நெருக்கடி மற்றும் மன உளைச்சலை சந்தித்த உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட போகிறது.

உங்களின் திடீர் வளர்ச்சி அண்டை அயலார் மற்றும் உற்றார் உறவினர்கள் மத்தியில் தனி அந்தஸ்த்தை பெற்றுத்தரும். பேச்சை தொழிலாக கொண்ட பெயர், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரவு மகிழ்வை தரும். வேற்று மத , இன அல்லது மொழி பேசுபவர்களின் நட்பு கிடைக்கும் அல்லது வாழ்க்கைத் துணை கிடைக்கலாம். அந்நிய மொழியை கற்பதில் ஆர்வம் மிகும். அந்நிய மொழி பேசுபவரால் குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படலாம்.பால்ய வயது குழந்தைகளுக்கு பேச்சு வருவதற்கு கால தாமதம் ஏற்படலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது கேட்பது நல்லது.

அவிட்டம் 1, 2

அசுப பலன்கள் குறைவாகவும் சுப பலன்கள் அதிகமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு விபரீத ராஜயோகம் செயல்பட்டு லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தை, இன்சூரன்ஸ் உயில் சொத்து மூலம் ஆதாயம் கிட்டும். தொழில், பணி அல்லது குடும்ப சூழல் காரணமாக தம்பதிகள் சிறிது காலம் பிரிந்து வாழலாம். திருமணம் நிச்சயமாகும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும்.பிரிந்த தாய், தந்தை மீண்டும் இணைவார்கள். கவனக்குறைவான செயல்களால் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம். அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சினை ஏற்படும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். உடல்நிலை தேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பனிப் போர் மறையும். பொது வாழ்வில் இருப்பவர்களின் வெளிப்படையான பயமற்ற கருத்துகள் மக்கள் மத்தியில் நன் மதிப்பை அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் மிகும். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும்.பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்வது நல்லது. குலதெய்வத்தை வழிபடவும்.

பரிகாரம்: பிரதோஷ காலங்களில் விரதம் இருந்து நந்தியையும் சிவபெருமானையும் வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News