2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
அஷ்டம ஸ்தானத்தில் ராகு ஆரோக்கியத்தை கவனித்துப் பாரு!
கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், 26.4.2025 அன்று அஷ்டமத்திற்கு வரப்போகிறார். அந்த நேரம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்து வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றை குறிக்கும் இடமான 2-ம் இடத்திற்கு வரப்போகிறார். அங்கு சுமார் 1½ ஆண்டு காலம் வீற்றிருந்து உரிய பலன்களை வழங்குவார். மறைந்த ராகுவால் நிறைந்த தன லாபம் கிடைக்கும்.
பெயர்ச்சியாகும் ராகு அஷ்டம ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது. மனோபயம் அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனை வந்து கொண்டே இருக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியிலும் ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. பல வேலைகள் அரைகுறையாகவே நிற்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.4.2025 முதல் 31.10.2025 வரை)
பூரட்டாதி நட்சத்திரக் காலில் குரு சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிலும் விரைந்து செயல்பட்டு வெற்றிகளை குவிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும்.
சொத்துக்கள் வாங்குவதிலும், விற்பதிலும் மும்முரம் காட்டுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் நடக்கும் தொழிலை யாரிடமேனும் ஒப்படைத்து விட்டு புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
சுய சாரத்தில் ராகு சஞ்சாரம் (1.11.2025 முதல் 9.7.2026 வரை)
சதய நட்சத்திரக் காலில் தனது சுய சாரத்தில் ராகுபகவான் சஞ்சரிக்கும் பொழுது, மிக மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். அரசு வழி தொல்லைகளை சந்திக்க நேரிடும். பகைக்கு மத்தியில் வாழ்க்கை அமையும் நேரம் இது. எந்த நேரமும் விழிப்புணர்ச்சியோடு இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனச்சோர்வு அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை குறையும். செயல்பாடுகளில் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும்.
சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)
உத்ரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது, கொடுக்கல்- வாங்கல் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். வருமானம் உயர புதிய யுக்திகளை கையாளுவீர்கள். குடும்ப சுமை கூடினாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உருவாகும். அரசு வழி அனுகூலம் கிடைக்கும்.
அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நன்மை உண்டு. மின் சாதன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது கைகூடும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம்.
சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)
பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அச்சுறுத்தும் நோய்கள் அகலும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். சிநேகிதர்கள் உங்கள் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பர். உதிரிகளாய் கிடந்த உறவுகள் ஒட்டிக்கொள்ளும் நேரம் இது.
உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். மருத்துவச் செலவுகள் குறையும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. குடும்பத்துடன் புனித பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சனிப்பெயர்ச்சி காலம்
6.3.2026 அன்று சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சியாகி செல்கிறார். இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருந்தது. இப்பொழுது அது விலகிவிட்டது. எனவே இனி தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லைகள் அனைத்தும் தீரும். பட்ட கஷ்டங்கள் அகலும். பணவரவு வந்து குவியும்.
குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகும். இதுவரை எவ்வளவோ பிரயாசை எடுத்தும் முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதியவர்களை சேர்த்து கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
குருப்பெயர்ச்சி காலம்
ராகு - கேது பெயர்ச்சி காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. வருகிற 11.5.2025 அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதன் விளைவாக உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். நிலம், பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சி பலன் தரும்.
அக்டோபர் 8-ந் தேதி மீண்டும் கடக ராசிக்கு குரு வருகிறார். அப்பொழுது உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பெற்றோர் வழி ஆதரவோடு பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள்.