ராகு பெயர்ச்சியால் யோகம் சேரும் மேஷ ராசி நேயர்களே!
வந்துவிட்டது புத்தாண்டு. வளர்ச்சி அதிகரிக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்குரிய 9 எண் ஆதிக்கத்தில் ஆண்டு பிறக்கின்றது. ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க உத்தரவாதம் தரும் விதத்தில் மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சியும் நிகழவிருக்கின்றது.
புத்தாண்டின் கிரக நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ரம் பெற்றும், நீச்சம்பெற்றும் சஞ்சரிக் கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமாதி பதியாகவும் செவ்வாய் விளங்குவதால் அவர் நீச்சம் பெறுவது நன்மைதான். எதிர்பாராத விதத்தில் எண்ணற்ற காரியங்கள் திடீர் திடீரென்று முடிவாகும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறப்போகிறது.
இரண்டில் உள்ள குரு, பொருளாதாரத்தில் முன்னேற்றமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கொடுக்கும். கடந்த காலத்தில் நடைபெற்ற கசப்பான அனுபவங்கள் மாறும். 12-ல் ராகுவும், 6-ல் கேதுவும் இருப்பதால் பயணங்களாலும் பலன் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்தும், ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும்.
லாபச் சனியால் லாபம் உண்டு. அவரோடு சுக்ரன் இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. சூரிய, சந்திர சேர்க்கையால் பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கலாம்.
விடாமுயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர் களோடு இருந்த அரசல் புரசல்கள் மாறும். யோகபலம் பெற்றநாளில் அனுகூல தலங்களைத் தேர்ந் தெடுத்து வழிபட்டு வந்தால், தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
கும்ப - ராகு, சிம்ம - கேது
வருடத் தொடக்கத்தில் 26.4.2025 அன்று ராகு - கேதுக்களின் பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. இவை இரண்டும் பின்னோக்கி நகரும் கிரகமாகும். இந்த கிரகப்பெயர்ச்சிதான் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டப் போகிறது. உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகுவால் பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட சரிவை ஈடுகட்டுவீர்கள்.
தொழில் விரிவு படுத்தும் முயற்சிக்கு கடனுதவி கிடைக்கும். உங்களுக்கு, 2026-ம் ஆண்டு ஏழரைச்சனி தொடங்குகிறது. எனவே இந்த ஆண்டின் இறுதியில் இருந்தே எதையும் யோசித்து செய் வது நல்லது. பஞ்சம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலப்படுகின்றது. புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள்.
திருமண வயதடைந்த பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்காக செய்த கல்யாண முயற்சி கைகூடும். சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுன - குருவின் சஞ்சாரம்
11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கின்றார். அப்பொழுது அவரது பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிவாகின்றது. அவரது பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், திருமண வாய்ப்பு கைகூடும்.
வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை அமையும். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கேட்டால் பணிபுரியும் இடத்தில் அது கிடைக்கும். குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் தந்தை வழியில் அனு கூலம் உண்டு. பங்காளிப் பகை மாறும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். புதிய வாகனம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். கொடுக்கல் - வாங்கல் சுமுகமாகும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால், தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் நேரம் இது. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
கும்ப -சனியின் சஞ்சாரம்
இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியையும், 5, 8 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். பொதுவாக லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் பெரும் தொகை கைகளில் புரளும்.
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். சுதந்திரமாக செயல்படும் சூழ்நிலை அமையும்.
கடக - குரு சஞ்சாரம்
இந்த வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்கு செல்லும் குரு பகவான், 8.10.2025 அன்று முதல் கடக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அங்கு அவர் உச்சம் பெற்று பலம் பெறுகிறார். கடக குருவின் சஞ்சாரத்தால் 8, 10, 12 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் உருவாகும். ஆரோக்கியப் பிரச்சினைகள் அகலும்.
அதே நேரம் விரயங்களும் கூடுதலாகவே இருக்கும். ஆனால் சுபவிரயமாக ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம், வீடு மாற்றம் இனிமை தரும்.
தொழில், வியாபாரம் வெற்றி நடை போடும். ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகுவர். 'படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல வேலையும், கைநிறைய சம்பளமும் கிடைக்கும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகளும், பதவிகளும் வரலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், அதற்கேற்ப சம்பள விகிதம் கூடும்.
குருவின் வக்ர காலம்
18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுன ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலங்களில் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஆதாயத்தை விடவும் விரயங்களே கூடுதலாக இருக்கும். திருமண முயற்சிகளில் தடை ஏற்படும்.
வரன்கள் வாசல் வரை வந்து திரும்பிச் செல்லும். எதையும் சிந்தித்து செய்ய வேண்டிய நேரம் இது. குரு வழிபாட்டோடு திசாபுத்திக் கேற்ற தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்து வழி படுவது நல்லது.
சனியின் வக்ர காலம்
2.7.2025 முதல் 17.11.2025 வரை, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி வக்ரம் பெறுவதால் தொழிலில் பிறரின் குறுக்கீடுகள் அதிகரிக்கும். சில ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
தைரியமும், தன்னம்பிக்கையும் மட்டுமல்லாமல் தெய்வ நம்பிக்கையும் சேர்ந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சகப் பணியாளர்களிடம் தங்கள் முன்னேற்றத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டாம். செவ்வாய் - சனி பார்வை காலங்களில் மிக மிக கவனத்தோடு செயல்பட வேண்டும்.