மேஷம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

Published On 2025-04-22 08:30 IST   |   Update On 2025-04-22 08:49:00 IST

ராகு வரும் இடம் லாப ஸ்தானம் நாளும் இனி உயரும் வருமானம்

மேஷ ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், 26.4.2025 அன்று 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். அதே நேரத்தில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அந்த இடத்தில் சஞ்சரித்து, அங்குள்ள நட்சத்திரப் பாதசார பலன்களுக்கேற்ப பலன்களை வழங்குவார்கள்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு ராகு வரும்பொழுது, பொருளாதாரம் மேம்படும். தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வாடகை கட்டிடத்தில் நடைபெற்று வரும் தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு, ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தானாக வந்துசேரும்.

பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு, புதிய சொத்துக்களை வாங்கும் எண்ணம் கைகூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.4.2025 முதல் 31.10.2025 வரை)

பூரட்டாதி நட்சத்திரக் காலில் குரு சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, பயணங்கள் அதிகரிக்கும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். வீடுமாற்றம், இடமாற்றம் ஆகியவை நினைத்தது போல் நடைபெறும். வாகன யோகம் உண்டு. வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வரலாம். முன்னோர்கள் கட்டிவைத்து சிதிலமடைந்த கோவில்களை, இப்பொழுது மீண்டும் திருப்பணி செய்து மகிழ்வீர்கள். பங்காளிப் பகை மாறும். தேங்கிக் கிடந்த பணிகளை சிறப்பாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)

உத்ரம் நட்சத்திரக் காலில் சூரியன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ எடுத்த புது முயற்சி பலன் தரும். பாதியில் நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள். பணம் ஒருபுறம் வந்தாலும், மறுநிமிடம் அதுசெலவாகி மனக்கலக்கத்தை ஏற்படுத்தும். மருத்துவச் செலவும் உண்டு. பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாது, உங்களிடமே திரும்பி வரக்கூடும். உத்தியோகத்தில் அரசு வேலைக்காக செய்த முயற்சியில் தடை ஏற்படலாம்.

சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)

பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும்பொழுது, குடும்ப முன்னேற்றம் திருப்தியாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். இல்லத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வெளிநாட்டு வணிகம் ஆதாயம் தரும். உயர் அதிகாரிகளின் ஆதரவோடு கேட்ட சலுகைகளைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, அதன் மூலம் வருமானம் வரும் நேரம் இது.

சனிப்பெயர்ச்சி காலம்

6.3.2026 அன்று சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கிறார். அப்பொழுது உங்களுக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது. இது முதல் சுற்றா?, இரண்டாவது சுற்றா?, மூன்றாவது சுற்றா? என்பதை சுய ஜாதக ரீதியாக ஆராய்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப உங்களுக்கு பலன்கள் நடைபெறும். ஏழரைச் சனி என்றதும் பயப்பட வேண்டாம். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதி சனி என்பதால், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். சில காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

குருப்பெயர்ச்சி காலம்

ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில், குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. வருகிற 11.5.2025 அன்று, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அப்போது சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல் சுமுகமாக இருக்கும். தந்தை வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் தடைப்பட்டு வந்த பதவி உயர்வு, இப்பொழுது தானாக கிடைக்கும். இடம், வீடு, வாகனம் வாங்க, கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தால் அது கிடைக்கப்பெறும். அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், கடக ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாகிச் செல்கிறார். அதன் பார்வை பலத்தால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப் படுத்தும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

Similar News