ஆன்மிக களஞ்சியம்

பஞ்சமுக ஆஞ்சநேயர் துதி

Published On 2023-07-26 12:18 IST   |   Update On 2023-07-26 12:18:00 IST
  • ஆஞ்சநேயர் ஒருமுகமாம் ஐந்தாவது திருமுகமாம் பஞ்சமுக ஆஞ்சநேயர் பதம் பணிய இதமாகும்
  • வாலில் பொட்டுமிட்டு வாழ்த்துக்கள் பாடிடுவோம் பாலில் நைவேத்தியம் பழங்கள் படைத்திடுவோம்

பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பக்தியுடன் தொழுதிடவே

அஞ்சுவது ஏதுமின்றி அருள்தந்து காத்திடுவார்

வராகம் ஒருமுகம் வடக்குமுகம் பார்த்திருக்கும்

வராது இடரெல்லாம் வரந்தந்து காத்திருக்கும்

நரசிம்மம் ஒருமுகமாம் நல்லருள் புரிந்திருக்கும்

சிரமதிசை நீக்கிவிடும் தெற்குமுகம் பார்த்திருக்கும்

ஹயக்ரிவர் ஒருமுகமாம் மேல்முகம் பார்த்திருக்கும்

சகலகலா பாண்டித்யம் சந்தோஷம் தந்துவிடும்

கருடனும் ஒருமுகமாம் கடிய விஷம் நீக்கும்

உருவான மேற்குமுகம் உற்றுநோக்கும் திருமுகமாம்

ஆஞ்சநேயர் ஒருமுகமாம் ஐந்தாவது திருமுகமாம்

வஞ்சனை விரோதங்கள் வரட்டு குரோதங்கள்

பில்லி சூனியங்கள் பெரும்பகை அகற்றிவிடும்

உள்ளமெல்லாம் நிறைந்திருந்து உற்றதுணை ஆகிவிடும்

கிழக்கு முகம் பார்த்திருக்கும் கேடின்றிக் காத்திருக்கும்

வழக்குகள் வெற்றிதரும் வாழ்விலும் வெற்றிதரும்

கன்னிமார் கல்யாணக் காலங்கள் கைகூடும்

எண்ணம்போல் மழலைகள் எழிலாகத் தோற்றுவிக்கும்

பஞ்சமுக ஆஞ்சநேயர் பதம் பணிய இதமாகும்

கொஞ்சிவரும் செல்வங்கள் கோடி கோடி நலமாகும்

ஐந்துமுக ஆஞ்சநேயர் அனுதினமும் அருள்தரவே

சென்தூரப்பொட்டுமிட்டு' சிந்தனைகள் ஒன்றாக்கி

வாலில் பொட்டுமிட்டு வாழ்த்துக்கள் பாடிடுவோம்

பாலில் நைவேத்தியம் பழங்கள் படைத்திடுவோம்

வெற்றிலை சுருளோடு வடையில் மலைகளும் சுற்றியே

சாத்திடுவோம் பற்று நாம் கொண்டிடுவோம்

ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம.

Tags:    

Similar News