ஆன்மிக களஞ்சியம்

குலசை திருவிழா-சூர சம்ஹாரம்

Published On 2023-08-12 16:42 IST   |   Update On 2023-08-12 16:42:00 IST
  • சூரசம்ஹாரம் என்றதும் திருச்செந்தூர் தலத்தில் கடலோரத்தில் நடக்கும் சூரசம்ஹாரம் தான் நினைவுக்கு வரும்.
  • திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் நடக்கும் சூரசம்ஹாரமும் உலகப் புகழ் பெற்று வருகிறது.

இரு சூர சம்ஹாரங்கள்

அசுரர்கள் எனும் ஆணவ சக்தி தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தும் போதெல்லாம் இறைசக்தி புதிய அவதாரம் எடுத்து, அவற்றை அழிக்கும். இதற்கு சம்ஹாரம் என்று பெயர். சூரனை சம்ஹாரம் செய்வதால் சூரசம்ஹாரம் என்கிறோம். உலகம் முழுவதும் தமிழர்களுக்கு, சூரசம்ஹாரம் என்றதும் திருச்செந்தூர் தலத்தில் கடலோரத்தில் நடக்கும் சூரசம்ஹாரம் தான் நினைவுக்கு வரும். தற்போது திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் நடக்கும் சூரசம்ஹாரமும் உலகப் புகழ் பெற்று வருகிறது. ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்த ஊர்களில் அதுவும் அடுத்தடுத்த மாதங்களில் நடக்கும் இந்த சூரசம்ஹாரங்கள் நிறைய ஒற்றுமைகளையும் & வேற்றுமைகளையும் கொண்டுள்ளன.

சூரபத்மன் எனும் அரக்கனை ஒழிக்கவே முருக அவதாரம் நிகழ்ந்தது. அது போல மகிஷாசுரனை அழிக்க அம்பாள் முத்தாரம்மனாக அவதரித்தார். முருகப்பெருமானுக்கு வலுவூட்டும் வகையில் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சத்தில் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம். அது போல அன்னை பராசக்தி வேள்வியில் வளர்த்த 9 நாட்களும் அதாவது புரட்டாசி அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையில் இருந்து 9 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம்.

சஷ்டியன்று திருச்செந்தூரில் முருகன் தேரில் எழுந்தருளி சூரபத்மனை சம்ஹாரம் செய்வார். குலசையிலும் முத்தாரம்மன் கடற்கரையில் தேரில் எழுந்தருளி மகிகனை சம்ஹாரம் செய்வாள். முருகன் சம்ஹாரம் செய்யும் முன்பு சூரன் விதம் விதமான வேடங்களில் வருவான். அது போலவே குலசையிலும் மகிஷன் மூன்று வடிவங்களில் வருவான். திருச்செந்தூர் கடற்கரையில் சூரபன்மனை தம் வேலால் முருகன் சம்ஹாரம் செய்வார். குலசையில் மகிஷனை சூலத்தால் அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

சம்ஹாரம் நடப்பதற்கு முன்பு திருச்செந்தூரில் வேலுக்கும் குலசையில் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவையெல்லாம் இரு தலத்திலும் உள்ள ஒற்றுமையான சம்ஹார தகவல்களாகும். ஒரே ஒரு முக்கியமான வித்தியாசம் திருச்செந்தூரில் சூரபன்மன் முருகனால் சம்ஹாரம் செய்யப்படும் நிகழ்வுகள் அமைதியாக நடைபெறும். ஆனால் குலசையில் மகிஷன் அழிக்கப்படும் நிகழ்வு மிகவும் ஆக்ரோஷமாக நடைபெறும். மற்றொரு வித்தியாசம் திருச்செந்தூரில் மாலை நேரத்தில் சூரசம்ஹாரம் நடத்தப்படும். குலசையில் நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும்.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகனை குளிர்விக்க அபிஷேகம் செய்வார்கள். குலசையிலும் அம்பாளுக்கு குடம், குடமாக பால் அபிஷேகம் நடைபெறும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் 90 சதவீத பக்தர்கள் புறப்பட்டு சென்று விடுவார்கள். ஆனால் குலசையில் விடிய, விடிய தசரா குழுக்களின் ஆடல் நிகழ்ச்சி நடைபெறும். குலசை சூரசம்ஹாரத்தை திருச்செந்தூர் சம்ஹாரத்தில் இருந்து மிகவும் வித்தியாசப்படுத்தி காட்டுவது இதுதான். மற்றப்படி இரு சூரசம்ஹாரத்துக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்துக்கும் கிடைக்காத இத்தகைய சிறப்பு தூத்துக்குடி மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது.

உடன்குடி கடைகளில் தசரா பொருட்கள்

தசரா விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான வேடம் அணியும் பக்தர்களுக்காக உடன்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக தசரா வேடப் பொருட்கள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்தது. கிரீடம், சடை முடி, காளிக்குரிய கைகள், குரங்கு, யானை முகமூடிகள், கண்மலர், சூலாயுதம், கம்மல், மூக்குத்தி மற்றும் போலீஸ், குறவன், குறத்தி, அரசியல்வாதி, கிரிக்கெட் வீரர்கள் போன்று பல விதமான வேடப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அம்மனுக்கு பயன்படுத்தக் கூடியது என்பதால் இந்த பொருட்களை தயாரிப்பவர்கள் கடும் விரதத்தை கடைபிடித்து இந்த பொருட்களை தயாரிப்பதாக சொல்கிறார்கள். திருச்செந்தூர், குலசையுடன் ஒப்பிடுகையில் உடன்குடி கடைகளில் விற்கப்படும் தசரா வேடப் பொருட்கள் விலை மிக, மிக குறைவாக உள்ளதாம். இதனால் வேடம் அணிபவர்கள் கூட்டம் உடன்குடியில் அதிகம் காணப்படுகிறது.

Similar News