search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "risk"

    • இந்து வாழ்வியலே சனாதானம்.
    • இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனாதானம் என்பது என்ன? என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.

    சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதனம் பற்றிய எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.

    சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சானாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொன்றது ஏன்? இதில் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பல்வேறு இடங்களில் 65 லிருந்து 70 நாட்களான பருத்தி பயிர்களில் தொடர் மழையால் பஞ்சு நிறம் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக நன்னிலம், வலங்கைமான், குடவாசல், கூத்தாநல்லூர், நீடாமங்கலம், கோட்டூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் 75 லிருந்து 85 நாட்கள் ஆன பருத்தி பயிர் வயல்களில் மழைநீர் தேங்கி பருத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பருத்தி பயிரில் பூக்கள் வைத்து வந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விழுந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மேலும் விவசாயிகள் பருத்தி வயல்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து பருத்தி பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இந்த தொடர் மழையின் காரணமாக பஞ்சு நிறம் மாறி வருவதாகவும் இதனால் பருத்தியின் தரம் குறைந்து குறைந்த விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக கமலாபுரம், ஓகை ,பேரையூர், புனவாசல்,,பூந்தாழங்குடி, கீழ மணலி, மேல மணலி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கோட்டூர், விக்கிரபாண்டியம், புழுதிக்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 65 லிருந்து 70 நாட்களான பருத்தி பயிர்களில் தொடர் மழையால் பஞ்சு நிறம் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பருத்தி பயிரிட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக வயல்களில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட நிலையில் மழை நீரை வடிய வைத்து மீதமுள்ள பருத்திச் செடிகளையாவது காப்பாற்றி விடலாம் என்கிற முனைப்பில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது பஞ்சு நிறம் மாறுவதால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் பருத்தியின் தரம் குறைந்து விட்டதாக கூறி வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை வாங்கும் நிலை ஏற்படும் எனவும் இதனால் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத சூழல் ஏற்படும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது தொடர்பாக வேளாண் அதிகாரிகள் பருத்தி பயிரை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய வகை மரபணுவானது அல்காப்டோனூரியா அல்லது கருப்பு சிறுநீர் நோயை உருவாக்கும் தன்மை கொண்டது.
    • மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம்

    சென்னை:

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உயிர் வேதியியல் துறையை சேர்ந்த நிபுணர்கள், சென்னையை சேர்ந்த நரிக்குறவர் மக்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். அப்போது அவர்களின் உடலில் புதிய வகை மரபணு மாற்றத்தை கண்டுபிடித்தனர்.

    இந்த புதிய வகை மரபணுவானது அல்காப்டோனூரியா அல்லது கருப்பு சிறுநீர் நோயை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த புதிய வகை மரபணு தொடர்பாக ஆராய்ச்சி தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 3 நாட்கள் தொடர் மருத்துவ கல்வி திட்டம் மற்றும் பகுப்பாய்வு உயிர் வேதியியல் குறித்த பயிலரங்கு நடந்தது. இந்த பயிலரங்கில் நரிக்குறவ மக்களிடையே கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மரபணு பற்றிய ஆய்வு அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் இருந்து 110 மருத்துவர்கள் பங்கேற்றனர்.

    இந்த பயிலரங்கத்தில் அல்காப்டோனூரியா மரபணு மாற்றம் பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

    இந்த பயிலரங்கத்தில் பேசிய மருத்துவர்கள் கூறியதாவது:-

    அல்காப்டோனூரியா நோயை தோற்றுவிக்கும் புதிய வகை மரபணு மாற்றம் கொண்டவர்கள், இளம் வயதிலேயே மூட்டுவலி மற்றும் இதயநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவர்களுக்கு சிறுநீர் கருப்பு நிறத்தில் வெளியேறும். அல்லது காற்று பட்டவுடன் சிறுநீர் கருப்பு நிறத்தில் மாறும்.

    இது உடலில் ஹோமோ ஜென்டிசிக் அமிலம் எனப்படும் ரசாயனத்தை உருவாக்கி உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த மரபணு மாற்றமானது பரம்பரை வழியாக மிகவும் அரிதாகவே ஏற்படும். மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம். மேலும் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையில் அபாயங்கள் இருக்கின்றன.
    • அறுவை சிகிச்சை பற்றி பரவும் செய்திகளும் உயிரிழப்பும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    உடல் பருமனாக இருப்பவர்களை வேடிக்கையாகப் பார்த்து வியந்த காலம் மாறி, இன்று பெரும்பாலானோருக்கு அது பொதுப் பிரச்சனையாகிவிட்டது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வளரும் சூழல் என உடல் பருமனுக்கான காரணங்கள் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால் இன்று உலகை ஆட்டுவிக்கும் பெரும் பிரச்னையாக உடல் பருமன் உருவெடுத்து நிற்கிறது.

    சாதாரணமாக உடல் எடையை குறைக்க மாத்திரை, டயட் என பல வழிமுறைகள் உண்டு. ஆனால், குறிப்பிட்ட உடல் எடையை தாண்டியவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

    ஆனால், உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையில் பல அபாயங்கள் இருக்கின்றன. மேலும் எல்லோருக்கும் இது பொருந்திப் போவதும் இல்லை. சில மருத்துவமனைகள் அந்த அபாயங்களை மறைத்து அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்து காசு பார்ப்பதும் நடக்கிறது.

    உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை செய்து உடல் எடையைக் குறைக்க சோம்பல் படும் இளம் தலைமுறையை, இந்த அறுவை சிகிச்சை ஈர்க்கிறது. இச்சூழலில் அண்மைக்காலமாக இந்த அறுவை சிகிச்சை பற்றி பரவும் செய்திகளும், தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்பும் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

     கொழுப்பை அகற்றும் சிகிச்சை முறைகள்

    கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சையிலும் இரைப்பையின் அளவில் ஒரு பகுதி நீக்கப்பட்டு விடும். நாம் உண்ணும் உணவு சிறுகுடல்களில் தான் சத்துகளை உட்கிரக்கும். சிறுகுடலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதால், உணவின் மூலம் கிடைக்கக் கூடிய சத்துகள் குறைக்கப்படுகிறது. அதனால் எடை கட்டுக்குள் வரும்.

    உடலில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தேங்கியிருக்கும் கொழுப்பை நீக்க லைப்போசக்ஷன் (Liposuction) அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    லைப்போசக்ஷன் சிகிச்சையின் மூலம் கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்புப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அகற்றப்படும்.

    அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், சாதாரண ஊசி மூலமாகவும் உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படும்.

    பொதுவாக, உடல் பருமன் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு ஏற்கெனவே தைராய்டு, சர்க்கரைநோய், இதயம் தொடர்பான நோய்கள் இருக்கலாம். எனவே, அறுவை சிகிச்சைக்கு முன்பாக, அவரது உடல்நிலை தொடர்பான முழுமையான விவரங்களைக் கேட்டு, பரிசோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.

    யாரெல்லாம் செய்துகொள்ளலாம்?

    நாள்பட்ட டைப் 2 சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், அதிகக்கொழுப்பு, தூக்கத்தில் மூச்சுத்திணறல், நீண்டநாள் செரிமானக் கோளாறுகள், சர்க்கரை நோய் போன்ற மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு பி.எம்.ஐ. அளவு 35-க்கு மேலும் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். ஆனால், இந்த பி.எம்.ஐ அளவு குறைவாக இருக்கும் நிலையில், அழகுக்காக சிலர் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ள வருகிறார்கள்.

    உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சிக் கூடங்கள், உணவுக் கட்டுப்பாடுகள், நடைபயிற்சி, சைக்ளிங் போன்ற சில வழிகள் இருக்கின்றன. அவற்றை மேற்கொண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதே சிறந்தது.

    • மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது.
    • மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோட்டயம், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மேலும் எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களில் அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவ மனைகளும் இங்கு ஏராளம். இருந்த போதிலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் நோயாளிகள் அதிக அளவில் வருகிறார்கள். திருவனந்தபுரம் உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் ஆஸ்பத்திரிகளை போன்று நவீன மருத்துவ வசதிகள் இருக்கின்றன. இதனால் வசதி படைத்த வர்கள் கூட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற விரும்பு கின்றனர்.

    இப்படிப்பட்ட சூழலில் கேரள மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் ஒரு சிக்கலான நிலை உருவாகி இருக்கிறது. கேரள மாநில அரசு கடந்த சில மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இது இந்த மாத தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் எதிரொலித்தது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு நாட்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மாதம் அது மிகவும் தாமதமாக வழங்கப்பட்டது. பல துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த நிதி நெருக்கடி மருத்துவத் துறையையும் பாதித்துள்ளதாக தெரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருந்து விநியோகத்தில் ஏராளமான வினியோகஸ்தர்கள் ஈடுபடுகின்றனர்.

    அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை அரசு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வழங்கி வந்தபடி இருந்தது. இந்நிலையில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை பல மாதங்களாக மாநில அரசு வழங்காமல் உள்ளது.

    2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் ரூ.143கோடி தொகையை விநியோகஸ்தர்களுக்கு மாநில அரசு வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவ னந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.50கோடி வரை பாக்கி வைத்துள்ளது.

    அதேபோல் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ17.55 கோடியும், கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ23.14 கோடியும், எர்ணாகுளம் பொது மருத்துவமனை ரூ10.97 கோடியும், கோழிக்கோடு பொது மருத்துவமனை ரூ3.21 கோடியும் பாக்கி வைத்துள்ளது. இதே போல் மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு அறுவை சிகிச்சை நிறுவன விநியோகஸ்தர்கள் மாநில அரசை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்க அரசு நடவ டிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த அறுவை சிகிச்சை உபகரண நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் அந்தந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தில் எங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கிதொகையை வருகிற 31-ந்தேதிக்குள் கட்ட தவறி னால், உபகரணங்கள் சப்ளை நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த ஆகஸ்ட் மாதம் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது. அதன் எதிரொலியாக அறுவை சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அங்கு இருதய அறுவை சிகிச்சைகள் ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. பின்பு இரண்டு மாத நிலுவை தொகையான 6 கோடி ரூபாயை அரசு செலுத்தியபிறகே விநியோ கஸ்தர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை உபகரணங்களை சப்ளை செய்தனர். பின்பு தான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெற தொடங்கின.

    இந்தநிலையில் தற்போது அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்கள் சப்ளையை நிறுத்துவோம் என்று கூறி இருப்பதால் தற்போது மீண்டும் பிரச்சினை உருவாகி இருக்கிறது.

    அவர்கள் கூறியிருப்பது போல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் சப்ளையை நிறுத்தினால் மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி களில் ஏப்ரல் மாதம் முதல் அறுவை சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் தட்டுப் பாடு ஏற்படும்.

    இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நோயா ளிகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.

    தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு நோயாளிக்கும் தேதி குறிப்பிடப்பட்டே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வெகுநாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையே நிலவி வருகிறது.

    இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்வது முற்றிலும் தடைபடும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

    அறுவை சிகிச்சை நிறுவனங்களின் விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முற்றிலுமாக வழங்கி, பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    • கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
    • ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஆண்கள் பிரிவு மையம் அமைந்து உள்ளது.

    அங்கு பொதுமக்கள் கை கழுவும் இடத்தில் ஒரு தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டு உள்ளது. இது கடந்த சிலநாட்களுக்கு பழுதடைந்து விட்டது.

    எனவே அந்த பகுதியில் தற்போது குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாகி பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் குளம்போல கழிவுநீர் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்துவமனையில் நோய் ஏற்படும் அவல நிலை உள்ளது.

    எனவே வால்பாறை ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக தண்ணீர் குழாய் அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆழ்துளை கிணறு அமைத்த போதும், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
    • அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

     திருப்பூர்,செப்.26-

    தொடர் வறட்சியால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்த போதும், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.

    விவசாயத்தையும், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் உருவாக்கப்பட்டது. பவானி ஆற்று நீரை, குழாய்கள் மூலம் கொண்டு வந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்புவதற்கான திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. குளம், குட்டைகளில் நீர் ஏற்றி சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாதது, விவசாயிகள், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. திருப்பூர் கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி விவசாயிகள் குரல் எழுப்பினர். கோரிக்கை மனுக்களும் அளித்துள்ளனர்.

    விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பருவமழை பொய்த்ததால், அவிநாசி, ஊத்துக்குளி தாலுகா பகுதிகளிலும் திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஊராட்சிகளில் வறட்சி நிலவுகிறது. இப்பகுதிகளில் விவசாயிகள், நடப்பு ஆண்டு வைகாசி பட்டத்தில் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். கோடை மழை பெய்யாததால் கடலை செடிகள், பூ, பிஞ்சுடன் காய்ந்து போய்விட்டன. வறட்சியால் ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது.

    பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். பொதுமக்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த திட்டத்தை இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டுவராதது ஏமாற்றம் அளிக்கிறது.தமிழக அரசு அவிநாசி - அத்திக்கடவு திட்டம் மூலம், குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பி,மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீரோடையில் கிடக்கும் குப்பைகள் மூலம் நோய் பரவும் அபாயம்
    • குப்பை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்க கோரிக்கை

    கோவை,

    கோவை மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே நொய்யல் ஆறு மூலம் ஆங்காங்கே நீரோடைகள் ஓடி கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் குடியிருப்புவாசிகள் ஒரு சிலர் இந்த நீரோடைகளில், குப்பை கழிவுகளை கொட்டுவதால், நீரோட்டம் தடைபடுவது மட்டுமின்றி, நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் நோய் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    நொய்யல் ஆறு என்பது கோவைக்கு கிடைத்த வரப்பிரசாதம். இத்தகைய நொய்யல் ஆறு கோவை மாநகரம் முழுவதும் ஆங்காங்கே நீர் ஓடைகள் மூலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    பொதுமக்கள் செய்யும் தவறுகளால் இந்த நொய்யல் ஆறு மாசடைந்து காணப்படுகிறது.நகர வீதிகளில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைத்திருந்தாலும் குப்பை தொட்டியில் குப்பைைய போடாமல் கீழே போடுவார்கள்.

    தற்போது குப்பைகளை நீரோடைகளில் கொட்ட தொடங்கி உள்ளனர்.

    நீரோடை என்பதால் தண்ணீரில் அடித்து சென்று விடும் என நினைத்து குப்பைகளை கொட்டுகின்றனர். ஆனால் மேலும், மேலும் கொட்டப்படும் குப்பைகளால் அங்கு நீரோடை இருக்கிறதா என்ற கேள்வியே எல்லோருக்கும் எழும்.

    அந்தளவுக்கு அங்கு குப்பைகளை தேக்கி நீர் செல்ல முடியாத அளவுக்கு மாறிவிடுகிறது.

    மேலும் குப்பைகள் மக்கி அதில் இருந்து ஒரு சில பாக்டீரியாக்களும் வெளியாகின்றன. இவை துர்நாற்றம் ஏற்படுத்துவதோடும் பொதுமக்களும் சில பல நோய்களையும் உருவாக்கி வருகிறது.

    குறிப்பாக கோவையில் மதுக்கரை மார்க்கெட் அருகே ஒரு நீரோடை செல்கிறது. அந்த நீரோடையில் அங்கு குடியிருப்பவர்கள் குப்பைகளை கொட்ட ஆரம்பித்தனர். தற்போது அங்கு நீரோட்டம் தடைபட்டு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.

    இவர்கள் மட்டுமின்றி மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் இரவு நேரங்களில் வந்து குப்பையை கொட்டி செல்கிறார்கள். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.

    3 சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாக இருக்கும் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது.மேலும் நீர் ஓடையில் குவிக்கப்பட்டி ருக்கும் குப்பைகள் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோயையும் பரப்பி வருகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இதை ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற வேண்டும்.

    மேலும் குப்பைகளை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • போலீசார் நடைமேடையில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

    கோத்தகிரி,

    கோத்தகிரி காந்தி மைதானம்-ராம்சந்த் ரோட்டில் இடது புறம் லாரிகள் நிறுத்தும் இடமாகவும், வலது பக்கம் நடைமேடையும் உள்ளது. இது மிகவும் குறுகலான சாலை. எனவே வாகனங்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றன.

    காந்தி மைதானம்-ராம்சந்த் சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் நடை மேடையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

    இதனால் அங்கு பொதுமக்கள் நடக்க முடியாமல் நடுரோட்டில் இறங்கி செல்ல வேண்டி உள்ளது. எனவே பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே போக்குவரத்து போலீசார் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடைமேடையில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது
    • போக்குவரத்து சிக்னலை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி, சோமனூர் நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து சிறு சிறு விபத்துகள் நடந்து வருகின்றன.

    எனவே கிருஷ்ணாபுரம், கொங்கு வேளாளர் திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடு சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கருமத்தம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.

    ஆனால் அவை கடந்த பல மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.இதனால் அந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது.
    • இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக்கோடு போல இந்த ஆறு அமைந்துள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஆற்றின் மேல் பழமையான உயர் மட்டப் பாலம் அமைந்துள்ளது.

    தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்லும் இந்த ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்தும், தரைத்தளத்தில் புற்கள் வளர்ந்தும் உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல மாதங்களுக்கு முன் நடந்த வாகன விபத்தால் பாலத்தின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவர் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த பக்கவாட்டு சுவர்களில் சாய்ந்து நின்று சில நேரங்களில் சற்று தொலைவில் செல்லும் ரெயில், சலசலத்து ஓடும் ஆறு என இயற்கையை பலரும் ரசிக்கின்றனர்.

    அதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டு சுவர் முழுமையாக உடைந்தால் பொதுமக்கள் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் சேதமடைந்த பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், பாலத்தை முழுமையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    தடுப்பு சுவர்

    குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு ஓடைசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தரை பாலமும் உயர் மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன.

    உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்துக்கு அருகில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இரு புறங்களிலும் கரைப்பகுதியில் மழை நீர் தேங்கி விடுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் தேங்கி கிடக்கிறது.எனவே நீர் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கான்கிரீட் பாலம்

    குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடையிலிருந்து கோவை மாவட்டம் ஜல்லிபட்டி செல்லும் மெயின் ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூரிலிருந்து பொங்கலூர், மேட்டுக்கடை வழியாக மருதூர், பொன்னாபுரம் பகுதிக்கு செல்லவும் இந்த ரோடுதான் முக்கியமாக விளங்கி வருகிறது. இதில் தும்பலப்பட்டியை ஒட்டி பாயும் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தரைப்பாலத்தில் வேறெங்கும்இல்லாதவிதமாக 2 ஓடைகள் இணைகின்றன. மழைக்காலங்களில் ஓடைகளில் தண்ணீர் பாயும்போது, தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் குறைந்த அளவு தண்ணீர் செல்லும்போது பாலத்தில் பாசி பிடித்து இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் மீது தார்ஜல்லி போட்டுள்ளனர். மேலும் பாலத்தின் வடக்கு பகுதியில் குறுகிய வளைவு இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ரோட்டின் வளைவுகளை சரிசெய்து, உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைத்து தரவேண்டும் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறுவாணி அணையின் ஒட்டுமொத்த உயரம் 50 அடி ஆகும்.
    • 15 நாளுக்கு மட்டுமே அணையில் நீர் இருப்பு உள்ளது

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணைக்கட்டு, மாநகருக்கான குடிநீர்ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் ஒட்டுமொத்த உயரம் 50 அடி ஆகும். இதில் 45 அடிகள் வரை தண்ணீர் தேக்க இயலும்.

    சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் உறைகிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 4 வால்வுகள் பொருத்தி தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. அதன்பிறகு இந்த தண்ணீர் பெரிய குழாய்கள் மூலம், கோவைக்கு கொண்டு வரப்பட்டு, மாநகரம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் மழை இல்லை. எனவே சிறுவாணி அணை படிப்படியாக வறண்டு வருகிறது. அங்கு தற்போது அரை அடி என்ற நிலையில்தான் தண்ணீர் உள்ளது. இதன்காரணமாக அணைக்கட்டின் பெரும்பாலான பகுதிகள், தண்ணீரின்றி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.

    சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை மாவட்டத்துக்கான கூட்டுகுடிநீர்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு உள்ள உறைகிணற்றில் 4 வால்வுகள் உண்டு. இதில் 3 தண்ணீர் மட்டத்துக்கு மேல் தெரிகிறது. எனவே மீதம் உள்ள ஒரு வால்வு மூலம் மட்டுமே தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது. இது 15 நாட்கள் வரை தாங்கும்.

    சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கனமழை பெய்யவில்லை என்றால் ஒட்டுமொத்த அணையும் வறண்டு, கோவையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து கோவை மாநகர குடிநீர் அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் பெரிய அளவில் மழை இல்லை. எனவே அங்கு தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நிலைமை இப்படியே போனால் 15 நாட்களுக்கு பிறகு உறைகிணற்றில் தண்ணீர் இருக்காது. கேரளா மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. எனவே சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அதுவும்தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அங்கு இன்னும் ஒருசில நாட்களில் பருவமழை தொடங்கி விடும். எனவே சிறுவாணி அணையில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து, குடிதண்ணீர் பிரச்சினை நீங்க வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    ×