Logo
சென்னை 19-04-2014 (சனிக்கிழமை)
ஜெமினிகணேசன் சொந்தமாக தயாரித்த ஒரே படம்: "நான் அவனில்லை" தோல்வி
ஜெமினிகணேசன் சொந்தமாகத் தயாரித்த ஒரே படம் "நான் அவனில்லை." எதிர்பார்த்தபடி படம் ஓடாததால் அவர் பெரிய ஏமாற்றம் அடைந்தார்.
மென்மையான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து புகழ் பெற்றவர், ஜெமினிகணேசன். தன் திறமை முழுவதையும் எடுத்துக்காட்டக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினார். அதை சொந்தமாகத் தயாரிக்க எண்ணினார்.
 
தன் விருப்பத்தை டைரக்டர் கே.பாலசந்தரிடம் கூறினார்.
 
ஜெமினியின் பலதரப்பட்ட திறமைகளையும் வெளிப்படுத்தக்கூடிய கதை உருவாயிற்று. அதுதான் "நான் அவனில்லை."
 
பல்வேறு தோற்றங்களில், பல்வேறு மொழிகளைப் பேசி, பல பெண்களை மணக்கும் கதாபாத்திரம். கடைசியில் போலீசில் பிடிபட்டு, விசாரணை நடைபெறும் கோர்ட்டிலேயே மரணம் அடைவார். இறப்பதற்கு முன் சொல்லும் "ஜீசஸ்" என்ற வார்த்தையின் மூலம், கதாநாயகன் உண்மையில் யார் என்பது தெரியவரும்.
 
மகள் நாராயணி பெயரிலேயே "ஸ்ரீநாராயணி பிலிம்ஸ்" என்ற படக்கம்பெனியை தொடங்கி இப்படத்தை ஜெமினி தயாரித்தார். மைசூரில் இருக்கும் பிரிமியர் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது.
 
ஜெமினிகணேசனுக்கு ஜோடியாக ஜெயசுதா உள்பட பல பெண்கள் நடித்தனர். வசனம் எழுதி கே.பாலசந்தர் இயக்கினார். இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.
 
படப்பிடிப்பு முழுவதும் மைசூரிலேயே நடைபெற்றது. 7_6_1974_ல் படம் வெளிவந்தது. படத்தின் "ரிசல்ட்" ஜெமினிக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. இதுபற்றி ஜெமினிகணேசன் எழுதியிருப்பதாவது:-
 
"நேசமும், பாசமும் உள்ள வேடங்களில் மட்டுமே நான் நடித்து வந்தேன். முரட்டு சுபாவமும், வில்லத்தனமும் நிறைந்த வேடங்களை ஏற்று நடிக்கும் வாய்ப்பை "நான் அவனில்லை" உருவாக்கி தந்தது.
 
சொந்தமாக தயாரித்த படம் என்பதோடு என் திறமை முழுவதையும் வெளிக்காட்ட எனக்கு சவாலாக அமைந்த படம் என்றும் இதை சொல்லலாம். படம் வெளிவந்த பிறகு பெயரையும், புகழையும் அள்ளித்தரும் என்று எதிர்பார்த்து, உயிரைக் கொடுத்து நடித்த எனக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.
 
அந்த படத்தில் நடித்ததற்காக 1974_ம் வருட சிறந்த நடிகனாக "பிலிம்பேர்" விருது கிடைத்தபோது என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது."
 
இவ்வாறு ஜெமினிகணேசன் கூறியுள்ளார்.
 
இப்படம் பற்றி டைரக்டர் கே.பாலசந்தர் கூறியிருப்பதாவது:-
 
"ஜெமினியைப் பொறுத்தவரையில் ஒரு சிற்பியின் கையில் கிடைத்தால் செதுக்கிய வடிவம் பெறும் சிலை அவர். களிமண்ணில் பானையாகவும் செய்யலாம். அழகிய கண்ணைப் பறிக்கும் பூந்தொட்டியாகவும் வடிக்கலாம். அது செய்பவன் கைத்திறனைப் பொறுத்தது.
 
அதுபோல் டைரக்டரின் எதிர்பார்ப்பைப் பொறுத்து அதற்கு எந்த உருவமும் கொடுத்து ஈடுகொடுக்கக்கூடிய நடிகர் அவர். அவரை வழி நடத்தும் இயக்குனரின், படைப்பாளியின் திறனைப் பொறுத்துத்தான் அவரின் நடிப்பும் அமையும். அவரை எப்படியும் மாற்றி நடிக்க வைக்கலாம்.
 
"நான் அவனில்லை" படத்தில் பத்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். திரைப்படக் கதை தரமாக அமைந்து, வெவ்வேறு கோணங்களிலும் அவர் மிக அருமையாக நடித்த அந்தப்படம், எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறாதது வருந்தத்தக்கது.
 
நான் மிகவும் ரசித்து இயக்கிய படம் அது. ஸ்வீட் ராஸ்கல் ரோலை (ஆன்டி ஹீரோ) ஜெமினிகணேசன் மிக அருமையாக கண் முன் நிறுத்திய படம் அது. ஹீரோவாகவோ, வில்லனாகவோ நடித்து விடலாம். ரசிக்கத்தக்க மாதிரி ஸ்வீட் ராஸ்கலாக வந்து முத்திரை பதிப்பது _ சற்று கடினமான விஷயம்.
 
`சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் கமலஹாசன் பெயரைத் தட்டிச் சென்றதும் "மூன்று முடிச்சு" படத்தில் ரஜினிகாந்த் வெற்றி பெற்றதும் அப்படி ஒரு ஸ்வீட் ராஸ்கலாகத்தான்."
 
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
 
மதிப்பீடு செய்க