Logo
சென்னை 23-04-2014 (புதன்கிழமை)
பி.யு.சின்னப்பா வராததால் கதாநாயகன் வேடத்தில் டி.ஆர்.சுந்தரம்!
நடுத்தரமான படங்களை தயாரித்து வந்த மாடர்ன் தியேட்டர்ஸ், 1941_ல் அதன் முதல் `மெகாஹிட்' படத்தை வெளியிட்டது. அதுதான் பி.யு.சின்னப்பா நடித்த "உத்தமபுத்திரன்." தமிழின் முதல் இரட்டை வேடப்படம்.

இதன் பிறகு பி.யு.சின்னப்பா நடித்த "தர்மவீரன்", "தயாளன்" ï.ஆர்.ஜீவரத்தினம் நடித்த "பக்தகவுரி", டி.ஆர்.மகாலிங்கம் நடித்த "மாயாஜோதி", ஹொன்னப்ப பாகவதர் _ டி.ஆர். ராஜகுமாரி நடித்த "சதி சுகன்யா" ஆகிய படங்களை சுந்தரம் தயாரித்தார். இவை சராசரிப் படங்கள்.
சுந்தரத்தின் அடுத்த மெகா ஹிட் திரைப்படம் "மனோன்மணி".
 
1942 நவம்பரில் வெளியான இப்படத்தில் பி.யு.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி, டி.ஆர்.மகாலிங்கம், ஆர்.பாலசுப்பிர மணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் என்று பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்தது.
 
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய கதை இது. வசனத்தை டி.வி.சாரி எழுதினார். டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்தார். இதில் வரும் சண்டைக் காட்சியை, ஏற்காடு மலையடிவாரத்தில் பிரமாண்டமாக எடுத்தார், சுந்தரம்.
 
இதில் 2 ஆயிரம் துணை நடிகர்கள் நடித்தனர். அவர்களுக்கு போர் வீரர்களுக்கான உடை தயாரிக்க நிறைய செலவாகி விட்டது. படப்பிடிப்பின்போது, இவர்களுக்கு உணவு வழங்க தேவையான சாம்பார் சாதம், தயிர் சாதம் சேலத்தில் தயாரிக்கப்பட்டு, பெரிய பெரிய அண்டாக்களில் நிரப்பப்பட்டு, மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்பட்டன. உணவு பரிமாற நூறு பேர், தண்ணீர் வழங்க 50 பேர் அமர்த்தப்பட்டனர்.
 
டைரக்டர் டி.ஆர்.சுந்தரம் உள்பட எல்லோருக்கும் ஒரே மாதிரி சாப்பாடுதான்! போர் வீரர்களாக வேடம் போட்டவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் 3 அணா! 6 கேமராக்கள் பல்வேறு கோணங்களில் போர்க்காட்சியை படமாக்கின. 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
 
"மிகுந்த பொருட்செலவில் தயாரான படம்" என்ற விளம்பரத்துடன் வெளிவந்த "மனோன்மணி", மாபெரும் வெற்றி பெற்றது. பிறகு, திவான் பகதூர், பக்தஹனுமான், ராஜராஜேசுவரி ஆகிய படங்களை எடுத்தார், சுந்தரம்.
 
இரண்டாம் உலகப்போரின் போது, 11 ஆயிரம் அடிக்குள் தான் படம் எடுக்கவேண்டும் என்று கட்டுப்பாடு வந்தது. ஜப்பான் ராணுவத்தை எதிர்த்து பிரிட்டிஷ் ராணுவம் போரிடுவதை பின்னணியாக வைத்து "பர்மாராணி" என்ற படத்தை தயாரித்தார், சுந்தரம். புராணப் படங்களிலும், ராஜாராணி படங்களிலும் நடித்து வந்த ஹொன்னப்ப பாகவதர், இதில் கோட்டு_சூட்டு அணிந்து, கதா நாயகனாக (ராணுவ பைலட்) நடித்தார்! அவருக்கு பாட்டு கிடையாது! கதாநாயகி கே.எல்.வி.வசந்தா. பர்மாவில் வாழும் இந்தியப் பெண்ணாக, சிறப்பாக நடித்தார்.
 

இந்தப்படத்தில் இன்னொரு புதுமை. ஜப்பானிய ராணுவ தளபதியாக, ஹிட்லர் மீசையுடன் (வில்லனாக) டி.ஆர்.சுந்தரம் நடித்தார்.
யுத்தத்தைப் பின்னணியாகக் கொண்ட படங்களில் "பர்மா ராணி"தான் சிறந்தது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் தேர்ந் தெடுத்து பரிசு வழங்கியது.
 
"பர்மா ராணி"க்குப்பிறகு, "சித்ரா" என்ற பெயரில் இன்னொரு யுத்தப் பிரசாரப் படத்தை சுந்தரம் தயாரித்தார். இதன் கதாநாயகன் டி.எஸ்.பாலையா! கதாநாயகி கே.எல்.வி.வசந்தா. 1946_ம் ஆண்டில் "சுலோசனா" என்ற படத்தை டி.ஆர்.சுந்தரம் தயாரித்தார். கதாநாயகன் இந்திரஜித்தாக பி.யு.சின்னப்பாவும், கதாநாயகியாக கே.எல்.வி.வசந்தாவும் நடிக்க ஏற்பாடாகியிருந்தது.
 
படப்பிடிப்பின் முதல் நாள். எல்லோரும் தயாராகக் காத்திருந்தார்கள். சுந்தரத்துடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், படப்பிடிப்புக்கு பி.யு.சின்னப்பா வரவில்லை.
 
"கதாநாயகனைக் காணோமே! எப்படி படப்பிடிப்பைத் தொடங்குவது?" என்று எல்லோரும் கையைப் பிசைந்து கொண் டிருக்க, டி.ஆர்.சுந்தரத்தின் முகத்தில் கவலையின் அறிகுறியே இல்லை. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பைத் தொடங்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டிருந்த டி.ஆர்.சுந்தரம், "மேக்_அப்" அறைக்குள் நுழைந்தார். சிறிது நேரத்தில் "இந்திரஜித்" மேக்கப்புடன் வெளிவந்தார்!
 
சுந்தரமும், கே.எல்.வி.வசந்தாவும் ஜோடியாக நடிக்க, படப்பிடிப்பு குறித்த நேரத்தில் தொடங்கியது. படம் 1947 ஜனவரியில் வெளிவந்து, நன்றாக ஓடியது.
 

பின்னர் சகடயோகம், கடகம், சண்பகவல்லி, லட்சுமி விஜயம் முதலிய படங்கள், மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் தயாராயின.
இதில் "கடகம்" படத்தில் விஜயகுமார் என்ற மதுரை இளைஞரும், பின்னர் "சென்னை அழகி" ("மிஸ் மதராஸ்") ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.சூர்யகுமாரியும் ஜோடியாக நடித்தனர். ஜெமினியின் "மங்கம்மா சபத"த்தை டைரக்ட் செய்த ஆச்சார்யா இதை டைரக்ட் செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், சுமாராகவே ஓடியது.
 
அடுத்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி", மாபெரும் வெற்றிப்படம். இதில் கதாநாயகியாக சிறப்பாக நடித்தவர் வி.என்.ஜானகி. (பிற்காலத்தில் எம்.ஜி.ஆரை மணந்தவர்.)

கதாநாயகனாக நடித்தவர் "புலியமா நகர் புலிக்குட்டி" என்று நாடக உலகில் புகழ் பெற்றவரான பி.எஸ்.கோவிந்தன். அசப்பில் டி.ஆர்.மகாலிங்கம் போன்ற தோற்றம் உடையவர். இவருக்கு ஜோடியாக (இரண்டாவது கதாநாயகியாக) எஸ்.வரலட்சுமி நடித்தார்.
 
படத்தில் ராஜகுருவாக _ சிந்தாமணியை ஆட்டி வைக்கும் போலி வேஷதாரியாக எம்.ஆர்.சுவாமிநாதன் நடித்தார். நகைச்சுவை நடிகரான இவருடைய திறமையை உணர்ந்து, மிகப்பெரிய வேடத்தை டி.ஆர்.சுந்தரம் கொடுத்தார். அந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு, அபாரமாக நடித்தார், எம்.ஆர்.சுவாமிநாதன்.
 
மற்றும் மாதுரிதேவி, எம்.ஜி.சக்ரபாணி, காளி என்.ரத்தினம், சி.டி.ராஜ காந்தம் ஆகியோரும் நடித்த இந்தப் படத்துக்கு இசை ஜி.ராமநாதன். டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்தார். இந்தப்படம் 1947_ல் வெளியாகியது. படத்தின் நீளம் 20,050 அடி. சுமார் 3 மணி நேரம் ஓடிய இப்படம், சற்றும் தொய்வில்லாமல் விறுவிறுப்புடன் அமைந்திருந்தது. கதையில் எதிர்பாராத திருப்பங்களும், மர்மங்களும் நிறைந்திருந்ததுதான், இதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.
 
ஜனரஞ்சகமான இப்படம், சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
 
அபூர்வ சிந்தாமணி படத்தின் விநியோக உரிமையை பின்னர் பெற்ற முருகேசன், அதை ரிலீஸ் செய்தபோது வசூல் மழை கொட்டியது. அபூர்வ சிந்தாமணி மூலம் புகழ் பெற்றதால், அவர் "சிந்தாமணி முருகேசன்" என்று அழைக்கப்பட்டார்.
 
முருகேசன் தீ விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்து, உயிருக்கே ஆபத்தான நிலையில் இருந்தபோது, அவர் சிறந்த முறையில் சிகிச்சை பெற சுந்தரம் உதவினார். அதனால் குணம் அடைந்த முருகேசன், "முதலாளி சுந்தரத்தின் உதவியால் நான் மறு பிறவி எடுத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

மாயாஜாலப் படங்களையும், சமூகப் படங்களையும் எடுத்து வந்த டி.ஆர்.சுந்தரம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய "எதிர்பாராத முத்தம்" என்ற குறுங்காவியத்தைப் படமாக்கத் தீர்மானித்தார்.
 
படத்துக்கு கதாநாயகன் பெயரே (பொன்முடி) சூட்டப்பட்டது. கதாநாயகனாக நரசிம்மபாரதியும், கதாநாயகியாக மாதுரி தேவியும் நடித்தனர். திரைக்கதை, வசனத்தை பாரதிதாசன் எழுதினார்.
 
அம்பிகாபதி, சகுந்தலை, மீரா ஆகிய படங்களை இயக்கிய எல்லிஸ் ஆர்.டங்கன், டைரக்ட் செய்தார். அவருக்கு உதவியாளராக கே.சோமு (பிற்காலத்தில் பிரபல டைரக்டராக உயர்ந்தவர்) பணியாற்றினார்.
 
பாடல்களை மருதகாசி, கா.மு.ஷெரீப் ஆகியோர் எழுத, ஜி.ராமநாதன் இசை அமைத்தார். கதாநாயகனுக்கான எல்லா பாடல்களையும் ஜி.ராமநாதனே பின்னணியில் பாடினார்.
 

பொன்முடி 1950 பொங்கல் தினத்தில் வெளிவந்தது. இது ஒரு வெற்றிப்படம். அன்றைய காலக்கட்டத்தில், காதல் கட்டங்கள் மிக நெருக்கமாக இருந்ததாக பரபரப்பாகப் பேசப்பட்டது.

மதிப்பீடு செய்க