என் மலர்


தேசிங்கு ராஜா 2
.
கதைக்களம்
சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விமல் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். மற்றொரு காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக புகழ் (பெண் வேடத்தில்) இருக்கிறார். இருவருக்கும் அடிக்கடி யார் பெரியவர்கள் என்பதில் போட்டா போட்டி வருகிறது. அதோடு காவல் நிலைய எல்லையில் வசூல் செய்வதிலும் பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நேரத்தில் 'மார்க்கெட் ரவுடி' ஒருவர் வெட்டி கொல்லப்படுகிறான்.
இந்த கொலையை செய்தது எம்.எல்.ஏ. ரவி மரியா என ஒரு ரவுடி கும்பல் சந்தேகப்பட்டு, ரவி மரியாவின் மகனை தீர்த்து கட்டி பழி தீர்த்து கொள்ள அந்த கும்பல் திட்டம் போடுகிறது. இதை தெரிந்து கொண்ட எம்.எல்.ஏ. ரவி மரியா தனது மகனை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்ற, போலீஸ் கமிஷனர் உதவியை நாடுகிறார். எம்.எல்.ஏ. மகனுக்கு பாதுகாப்பு வழங்க உதவி கமிஷனரான பூஜிதா தலைமையில் தனிப்படை போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விமலின் உதவியை பூஜிதா நாடுகிறார்.
இறுதியில் ரவுடி கும்பலிடம் இருந்து எம்.எல்.ஏ. மகனின் உயிர் தப்பியதா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
நடிகர்கள்
படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விமலின் நடிப்பு எடுபடவில்லை. மற்றொரு கதாநாயகனான ஜனா கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். அமைச்சர் கதாபாத்திரத்தில் ரவி மரியா வில்லத்தனம் கலந்த காமெடி படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட பெரும்பாலான காட்சிகள் அவரை சுற்றி தான் வருகிறது.
பெண் தோற்றத்தில் இன்ஸ்பெக்டராக வரும் புகழ் நடிப்பு கடுப்பை ஏற்றி இருக்கிறது.
மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, வையா புரி, கோதண்டம் என பல நகைச்சுவை பட்டாளமே நடித்திரிந்தாலும் சுத்தமாக சிரிப்பு வரவில்லை.
ஹீரோயினாக நடித்துள்ள பூஜிதா பொன்னடா காவல்துறை உயர் அதிகாரியாக முடிந்தவரை தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல் இரண்டாவது ஹீரோயின் ஹர்ஷிதாவும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். முதல்-அமைச்சராக வரும் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், திருச்சி சாதனா ஆகியோரும் அரசியல்வாதிகளாக வந்து செல்கின்றனர்.
இயக்கம்
தேசிங்கு ராஜா முதல் பாகத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய இயக்குனர் எழில், இரண்டாம் பாகத்தில் ஏராளமான நட்சத்திரங்களைக் கொண்டு சொதப்பி இருக்கிறார். கதையிலும் காமெடியிலும் கவனம் செலுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர்.
இசை
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்துள்ள வித்யாசாகர் தனது இசையால் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் செல்வா காட்சிகளை அழகாக படம் பிடித்திருப்பது ஓரளவு ஆறுதல் தருகிறது.
தயாரிப்பு
Infinity Creations நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.












