செய்திகள்

ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

Published On 2018-05-16 08:34 GMT   |   Update On 2018-05-16 08:34 GMT
ஊழல் வழக்கில் 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. #KhaledaZiaBail
டாக்கா:

வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்காவில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம, கலிதா ஜியாவுக்கு (வயது 72) 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் கலிதா ஜியா மேல்முறையீடு செய்தார். அத்துடன் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், கலிதா ஜியாவுக்கு கடந்த மார்ச் 12-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதனை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கலிதா ஜியாவுக்கு ஐகோர்ட் வழங்கிய ஜாமீனை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

இதற்கிடையே கலிதா ஜியாவின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வரும் ஐகோர்ட், ஜூலை மாதம் 31-ம் தேதி தீர்ப்பளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. #KhaledaZiaBail
Tags:    

Similar News