வாக்காளர் திருத்த படிவத்தை நிரப்புவது எப்படி? தேர்தல் ஊழியர்களுக்கு விளக்கி சொல்லும் வீடியோ வெளியீடு
- வாக்காளர் பட்டியலின் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- அந்த படிவத்தில் 3 கட்டங்களாக விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதால் சந்தேகங்களும், சிரமங்களும் ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக வீடு வீடாக வாக்காளர் பட்டியலின் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த படிவத்தில் 3 கட்டங்களாக விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதால் அதை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு நிறைய சந்தேகங்களும், சிரமங்களும் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி கொடுக்கும் தேர்தல் அதிகாரி இந்த விண்ணப்பங்களை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்று விளக்கி சொல்லும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறியதாவது:-
கணக்கீட்டு படிவத்தை எப்படி நிரப்புவது என்று எல்லோரும் சந்தேகம் கேட்கிறீர்கள். அதை விரிவாக சொல்கிறேன்.
2025 வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களின் போட்டோ விவரம் இதில் அடங்கி உள்ளது. முதல் கட்டத்தில் விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, வயதை அவர்களது ஆதார் கார்டில் உள்ளதை பார்த்து எழுத வேண்டும்.
அதன் பிறகு ஆதார் எண்களை எழுத வேண்டும். செல்போன் எண் தந்தை அல்லது பாதுகாவலரின் பெயரை குறிப்பிட வேண்டும். தந்தைக்கு வாக்காளர் அட்டை இருந்தால் அந்த அடையாள அட்டை எண்ணை எழுத வேண்டும். அதன் பிறகு அம்மா பெயரையும் அம்மாவின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை நம்பரை எழுத வேண்டும்.
இதற்கு பிறகு துணைவரின் பெயர் கேட்கப்பட்டு உள்ளதால் ஆணாக இருந்தால் மனைவி பெயரையும், பெண்ணாக இருந்தால் கணவர் பெயரையும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் எழுத வேண்டும்.
இந்த விவரங்கள் அனைத்தும் 2025 வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்கள் என்பதற்கான விவரங்கள் ஆகும். 2002-ல் இவர்களுக்கு ஓட்டு இல்லை என்றால் இதை மட்டும் பூர்த்தி செய்து கையெழுத்து போட்டு கொடுத்தால் போதும்.
2-வது கட்டம்
2002 வாக்காளர் பட்டியலில் இவர்களுக்கு ஓட்டு இருந்தால் ஏற்கனவே அந்த விவரங்கள் தேர்தல் கமிஷனின் பி.எல்.ஓ. செயலியில் உள்ளது. அதை பச்சை நிறத்தில் அடையாளம் செய்து வைத்துள்ளோம். அந்த சீரியல் நம்பரை பதிவு செய்து பார்த்தால் அனைத்து விவரங்களும் செயலியில் வந்துவிடும்.
அதில் 2002-ல் உள்ள அவர்களது பெயர், அடையாள அட்டை எண், அதில் உள்ள உறவு முறை, மாவட்டம், மாநிலம், சட்டமன்ற தொகுதி பெயர், அப்போது உள்ள பாகம் எண், வரிசை எண் அனைத்தும் வந்துவிடும்.
அதை வைத்து தேர்தல் ஊழியர்கள் பூர்த்தி செய்து விடலாம்.
3-வது கட்டம்
2002-ல் இவர்களுக்கு ஓட்டு இல்லை என்றால், விண்ணப்பதாரரின் உறவினர் யாராவது அதாவது அப்பா, அம்மா ஆகியோரின் விவரங்கள் இருந்தால் அதை எழுத வேண்டும். 2002-ல் அப்பா, அம்மாவுக்கும் ஓட்டு இல்லை என்றால் இல்லை என்று எழுதலாம்.
அதாவது 2 மற்றும் 3 கட்டங்களில் விவரம் இருந்தால் எழுதுங்கள். அல்லது இல்லை என்று எழுதுங்கள் அவ்வளவுதான்.
இவ்வாறு அந்த அதிகாரி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.