ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தருமபுரி:
கர்நாடகா, கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு மீண்டும் நேற்று நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 25 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 18 ஆயிரத்து 461 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 693 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 18 ஆயிரத்து 942 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரத்து 403 கனஅடி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 32 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை இருமாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.