தமிழ்நாடு செய்திகள்

நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

Published On 2025-09-03 09:42 IST   |   Update On 2025-09-03 09:42:00 IST
  • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
  • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

தருமபுரி:

கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தற்போது குறைந்தது.

இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 108 கனஅடியாக வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரத்து 805 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

கபினி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 993 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 317 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 33 ஆயிரத்து 122 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தொடர்ந்து 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை இருமாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News