தமிழ்நாடு செய்திகள்

நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்க தடை

Published On 2025-08-31 09:58 IST   |   Update On 2025-08-31 09:58:00 IST
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
  • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தருமபுரி:

கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்தது.

மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவித்துள்ளது.

விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குவிந்தனர். அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் ஆற்றின் கரையோரம் நின்று காவிரி ஆற்றில் பாயும் தண்ணீரை ரசித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.

சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News