தமிழ்நாடு செய்திகள்

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய காட்சி.

7-ம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி

Published On 2025-05-22 14:27 IST   |   Update On 2025-05-22 14:27:00 IST
  • துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.
  • துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் சமாதிகளில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.

அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

இது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை தூத்துக்குடி பாத்திமா நகரில் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட நிலத்தை அரசே திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 8 கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தனர்.

இதேபோல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர், தோமையார் கோவில் தெரு, பூபால ராயர்புரம், லயன்ஸ்டவுன் உள்ளிட்ட இடங்களிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் சமாதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்சிகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்ந்து இன்று காலை பாத்திமா நகர் சமுதாய நலக்கூடத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

போராட்டக் குழு பெசில் கோஸ்தா தலைமை தாங்கினார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ், மெரினா பிரபு, ஆனந்த் பாண்டியன், குணசீலன், ராஜ்குமார், சுந்தரமூர்த்தி, செல்வராஜ், மயில்சாமி, அமீர் ஜான், ஆதி ஆனந்த், அர்ஜுன், பிரபு, சுசிந்தரன், கார்த்தீபன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜென்ரோஸ், மா.கிருஷ்ண மூர்த்தி வரவேற்று பேசினர்.

கெபிஸ்டன் நினைவேந்தல் நோக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு பேராசிரியை பாத்திமா பாபு, அரிராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். இதில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், விசைப்படகு அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம் ஜவகர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News