லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் ராமநாதபுரம் வெளிப்பட்டினம் பொறுப்பு சார்பதிவாளர் பெத்துலட்சுமியின் வீட்டை காணலாம்.
லஞ்ச பணத்துடன் பெண் சார்பதிவாளரை பஸ்சில் சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார்: வீட்டிலும் அதிரடி சோதனை
- புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வழக்கத்தைவிட கூடுதல் பத்திரப்பதிவு நடைபெற்றது தெரிய வந்தது.
- ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
பரமக்குடி:
ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பெத்துலெட்சுமி என்பவர் சார்பதிவாளராக (பொறுப்பு) பணிபுரிந்து வருகிறார்.
இவர் பத்திரப்பதிவின்போது பொதுமக்களிடமிருந்து பதிவு கட்டணம் போக ஒரு குறிப்பிட்ட தொகையினை அப்பத்திரத்தின் தன்மைக்கு ஏற்பவும், அந்த சொத்தின் மதிப்பிற்கு ஏற்பவும் கூடுதலாக பணம் வசூல் செய்து வந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த பலர் புகார்களாகவும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வழக்கத்தைவிட கூடுதல் பத்திரப்பதிவு நடைபெற்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பத்திரப்பதிவுகளின் கட்டணத்தைவிட கூடுதல் பணத்தை (லஞ்ச பணத்தை) சம்பந்தப்பட்ட ஆவண எழுத்தர்கள் மூலமாகவும் இடைத்தரகர்கள் மூலமாகவும் பெற்று வந்துள்ளார்.
மேலும் அந்த பணத்தை தனது அலுவலக வளாகத்தில் வைத்து வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணி, அலுவலக நேரம் முடிந்த பின்னர் மேற்படி ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களை ராமநாதபுரம் பேருந்து நிலையம் பகுதிக்கு வரச்சொல்லி அவர்களிடமிருந்து வசூலித்து செல்வதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.
இதனை ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று இடைத்தரகர்களிடம் வசூல் செய்த பணத்தை பெற்றுக்கொண்டு பஸ்சில் ஏறி தப்ப முயன்ற சார்பதிவாளர் பெத்துலெட்சுமி மற்றும் சில அலுவலர்களை லஞ்ச ஒழிப்பு துறையினரை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களிடம் கணக்கில் காட்ட முடியாத அளவிற்கு பணம் இருந்துள்ளது.
அதனை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு துறையினர் இது சம்பந்தமாக அவரை அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அலுவலகத்தையும் சோதனை செய்தனர். இதன் முடிவில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.1,84,500-ஐ கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே பரமக்குடி புதுநகரில் உள்ள பெத்துலட்சுமி வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல் அவரது வீட்டிற்கு முன்பு வந்து நீண்ட நேரம் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 6.30 மணிக்கு மேல் வீட்டிற்குள் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.