தமிழ்நாடு

யூடியூப் மூலம் வியாபாரம்: தூத்துக்குடி வியாபாரியை வேலூருக்கு வரவழைத்து 36 ஆடுகள் திருட்டு

Published On 2023-10-11 10:11 GMT   |   Update On 2023-10-11 10:11 GMT
  • பெருமாள் தன்னிடம் இருந்த 36 ஆடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வேலூருக்கு வந்தார்.
  • ஆம்பூர் சென்றதும் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு லாரியில் ஆடுகளுடன் வாலிபர் சென்றுவிட்டார்.

வேலூர்:

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 58). ஆடு வியாபாரி.

இவர் சொந்தமாக ஆடு வைத்துள்ளவர்களிடம் இருந்து ஆடுகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். பெருமாள் ஆடுகளை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து ஆடு தேவைப்படுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என செல்போன் எண்ணை பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் பெருமாளை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனக்கு ஆடுகள் தேவைப்படுகிறது, ஆடுகளை வேலூருக்கு கொண்டு வந்தால் நேரில் பணம் தருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பெருமாள் தன்னிடம் இருந்த 36 ஆடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வேலூருக்கு வந்தார்.

பாகாயம் அடுத்த ஏ. கட்டுப்படி அருகே லாரி மற்றும் கூலியாட்களுடன் தயாராக இருந்த மர்ம நபர் பெருமாள் கொண்டு வந்த ஆடுகளை அவரது லாரியில் ஏற்றினார்.

பின்னர் ஆம்பூரில் பணம் தருவதாக கூறி பெருமாளை அழைத்துச் சென்றார். ஆம்பூர் சென்றதும் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு லாரியில் ஆடுகளுடன் வாலிபர் சென்றுவிட்டார். அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குடியாத்தம் பகுதியில் ஆடுகளுடன் லாரி நின்று கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி வாடகை மற்றும் கூலி ஆட்களுக்கு பணம் தராததால் இந்தப் பகுதியில் காத்து இருக்கிறோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் லாரியுடன் ஆடுகளை மீட்டனர். பாகாயம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும் ஆடுகளை நூதன முறையில் திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News