தமிழ்நாடு

பள்ளிகளுக்கு ஆசிரியைகள் சுடிதார் அணிந்து செல்ல தடையா?... அரசின் அறிவிப்பு குறித்து அறியாததால் குழப்பம்

Published On 2023-11-06 06:08 GMT   |   Update On 2023-11-06 08:52 GMT
  • தங்களுக்கு பிடித்தமான உடை அணியலாம் என அரசாணை இருந்தும், வேறு வழியின்றி சேலையை மட்டும் கட்டி வருகின்றனர்.
  • நாங்கள் எத்தகைய ஆடைகள் அணிந்து பள்ளிக்கு செல்வது என்பது குறித்து அரசாங்கம் தெளிவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

கோவை:

தமிழகத்தில் எண்ணற்ற அரசு பள்ளிகள் உள்ளன. இதுதவிர அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அதிகளவில் உள்ளன. இந்த பள்ளிகளில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், பேண்ட், சட்டையும், ஆசிரியைகள் சேலையும் அணிந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை எண் 67 ஒன்றை வெளியிட்டது. அதில் பள்ளியில் வேலை பார்க்கும் பெண் ஆசிரியைகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற பாரம்பரிய மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் கொண்ட உடைகளை அணிந்து கொள்ளலாம் என்றும், ஆண் ஆசிரியர்கள் தமிழக பாரம்பரிய அடையாளமான வேட்டி, சட்டை, சாதாரண பேண்ட், சட்டை என தங்களுக்கு பிடித்தமானவற்றை அணியலாம்.

இப்படி ஒரு அரசாணை இருப்பது இதுவரை தமிழகத்தில் உள்ள பல கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கே தெரியவில்லை என்பது தான் ஆச்சர்யமாக உள்ளது.

அரசாணை தெரிந்து, சில ஆசிரியைகள் சுடிதார் அணிந்து சென்றபோது, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், அரசாணை பற்றி அறிந்து கொள்ள முயலாமல் ஆசிரியைகளை திட்டுவதுடன், இனி இதுபோன்று அணியக்கூடாது எனவும் அவர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனால் தங்களுக்கு பிடித்தமான உடை அணியலாம் என அரசாணை இருந்தும், வேறு வழியின்றி சேலையை மட்டும் கட்டி வருகின்றனர்.

கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவரும் இதுபோன்ற சம்பவத்தை கடந்து வந்துள்ளார்.

கோவையில் உள்ள ஒரு பள்ளியில் 35 வயது பெண் ஒருவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் பள்ளிக்கு புடவை கட்டியே வந்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது அவருக்கு வசதியாக இல்லை என தோன்றியுள்ளது.

இருப்பினும் பள்ளிக்கு புடவை தானே கட்டி செல்ல வேண்டும் என கட்டி சென்றார். இந்த நிலையில் தான், அவருக்கு சுடிதார், துப்பட்டா அணிந்து கொள்ளலாம் என்று ஒரு அரசாணை இருப்பதே தெரியவந்தது.

இதையடுத்து அவர் பள்ளிக்கு சுடிதார், துப்பட்டா அணிந்து சென்றார். இதை பார்த்த சக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் இது பள்ளி, இங்கு சுடிதார் அணிந்து வரக்கூடாது. உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதற்கு அந்த பெண் ஆசிரியை, தமிழக அரசே ஆசிரியர்கள் சுடிதார், சல்வார் கமீஸ், புடவை இந்த 3-ல் எதுவென்றாலும் அணிந்து கொள்ளலாம் என கூறியுள்ளது. அதன்படியே எனக்கு புடவை வசதியாக இல்லாத காரணத்தால் நான் சுடிதார் அணிந்து வந்தேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் தலைமை ஆசிரியர், அப்படி ஒரு அரசாணையே கிடையாது. நீங்கள் அணிந்து வந்தது தவறு. இனி இதுபோன்று அணியாதீர்கள் என ஆசிரியையை எச்சரித்துள்ளார்.

இதையடுத்து அந்த ஆசிரியை வேறு வழியின்றி தற்போது புடவை அணிந்தே பள்ளிக்கு செல்கிறார்.

இதுகுறித்து அந்த பெண் ஆசிரியை கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், தங்களுக்கு பிடித்தமான ஆடைகளான, வேட்டி, சட்டை, சுடிதார், துப்பட்டா, சல்வார் கமீஸ், புடவை ஆகியவை அணிந்து கொள்ளலாம் என்றும், அது தமிழக கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி தான் நான் அணிந்து சென்றேன். ஆனால் சக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.

சில இடங்களில், புடவை அணியாமல் வரும் ஆசிரியைகளிடம் பள்ளி நிர்வாகம் விளக்கம் கேட்டு விசாரணையும் நடத்துகின்றனர். இது அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தும்.

இப்படி ஒரு அரசாணை இருப்பது, தமிழகத்தில் உள்ள பல கல்வி அதிகாரிகள் மற்றும், சக ஆசிரியர்களுக்கே தெரியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

இதனால் அவர்கள், விவரம் தெரிந்து அணிந்து வருபவர்களிடம் கூட பொத்தாம் பொதுவாக பள்ளி ஆசிரியைகள் சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை அணிந்து வரக்கூடாது என்று நெருக்கடி கொடுக்கின்றனர். மேலும் ஆசிரியைகள் சேலை அணிந்து தான் வரவேண்டும் எனவும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

மேலும் அவர்கள் நீங்கள் குறிப்பிடும் உத்தரவு பள்ளிகளுக்கு பொருந்தாது என குறிப்பிடுகின்றனர். எனவே நாங்கள் எத்தகைய ஆடைகள் அணிந்து பள்ளிக்கு செல்வது என்பது குறித்து அரசாங்கம் தெளிவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பொதுசெயலாளர் ராம்குமார் கூறும்போது, இதுபோன்று எண்ணற்ற ஆசிரியர்கள் பள்ளிகளில் அசாதாரண சூழ்நிலையை அனுபவிக்கின்றனர். இந்த அரசாணை தொடர்பாக பலருக்கு விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

"ஆசிரியர் மனசு" திட்ட இயக்குனர் கூறும்போது, ஆசிரியைகள் சுடிதார் மற்றும் நவநாகரிக உடைகள் அணிந்து பள்ளிக்கு வரலாம். இதுகுறித்து அரசாங்கம் ஏற்கெனவே உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மேலும் அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் இது தொடர்பாக விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்.

Tags:    

Similar News