தமிழ்நாடு செய்திகள்

தேனாம்பேட்டையில் பட்டம்விட்ட மாஞ்சா நூல் அறுத்து பெண்-வாலிபர் படுகாயம்

Published On 2023-04-25 12:36 IST   |   Update On 2023-04-25 12:36:00 IST
  • பட்டம் பறக்க பயன்படுத்தக்கூடிய மாஞ்சா நூல் நிக்கி சரண் கழுத்தில் திடீரென மாட்டியது.
  • தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாஞ்சா தடவி பறக்கவிட்டவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.

சென்னை:

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் நிக்கி சரண் (வயது33). அவரது பெண் நண்பர் வந்தனா (33). சாலி கிராமத்தை சேர்ந்தவர். இருவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

நேற்று இரவு இருவரும் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் தேனாம்பேட்டை விஜயராகவா தெருவில் சென்றனர். அப்போது பட்டம் பறக்க பயன்படுத்தக்கூடிய மாஞ்சா நூல் நிக்கி சரண் கழுத்தில் திடீரென மாட்டியது. இதை சற்றும் எதிர் பார்க்காத அவர் கழுத்து அறுந்த நிலையில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பெண் நண்பர் வந்தனா சுதாரித்துக் கொண்டு நண்பரை காப்பாற்ற மாஞ்சா நூலை இழுத்த போது அவரது கை விரல்களில் காயம் ஏற்பட்டது.

இருவருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டு வீதியில் நின்ற நிலையில் அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். கழுத்து பகுதி பலமாக வெட்டப்பட்ட நிலையில் இருந்த நிக்கி சரண் மற்றும் வந்தனா இருவரும் அங்கிருந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாஞ்சா தடவி பறக்கவிட்டவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News